
பிரபல நாளிதழையும் கரோனா விட்டுவைக்கவில்லை என்ற அதிர்ச்சி செய்தி ஊடகத்துறையினரை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது.
கரோனா கட்டுக்குள் இருக்கிறது என்று அரசு தரப்பு திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருக்கும் போதே கரோனா தொற்றின் வேகம் ஏகத்துக்கு எகிறி, பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்திக்கொண்டிருக்கிறது. இதில், சுகாதாரத்துறை, காவல்துறை, தீயணைப்புத் துறை என சகல துறைகளையும் பயமுறுத்திகொண்டிருக்கும் கரோனா, சமீப நாட்களாக ஊடகத்துறையினரையும் துரத்த ஆரம்பித்திருக்கிறது.
அண்மையில் ஒரு சில தொலைக்காட்சி ஊடகங்களை சேர்ந்த செய்தியாளர்களும், ஊழியர்களும் கரோனா தொற்றுக்கு ஆளான செய்தி, பரவலாக பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளேயே தற்போது பிரபல நாளிதழ் அலுவலத்துக்குள்ளும் கரோனா தன் காலடியை எடுத்து வைத்து கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.
அந்த அலுவலகத்தில் பணியாற்றும் 31 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், கொஞ்சநாள் அந்த அலுவலகம் செயல்பட வேண்டாம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். சென்னையில் உள்ள அந்த அலுவலகம் தற்போது தற்காலிகமாக மூடப்பட்டிருக்கிறது. எனவே, நிலைமையை சமாளிக்கும் விதமாக செய்திப்பிரிவு வேறொரு கிளைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.