
சிதம்பரம் மேல வீதியில் உள்ள கஸ்தூரிபாய் கம்பெனி மற்றும் என்.எம்.பி ரெடிமேட்ஸ் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 23-ஆம் தேதி விவசாயிகள் தினத்தையொட்டி உரம் மற்றும் மருந்து தெளிக்காமல் பாரம்பரியமான இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகளை அடையாளம் கண்டு அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று கௌரவிக்கும் பணிகளைத் தொடர்ந்து செய்து வருகிறது.
இந்த நிலையில் இந்த ஆண்டு டிசம்பர் 23 விவசாயிகள் தினத்தையொட்டி விவசாயிகள் பாரம்பரிய நெல், உணவுப் பொருட்கள், அரிசி வகைகளை மேல வீதியில் 21, 22, 23 மூன்று நாட்கள் காட்சிப்படுத்தப்பட்டு இயற்கை வேளாண் உணவுப் பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. இந்தக் கண்காட்சியை கஸ்தூரிபாய் கம்பெனி உரிமையாளர் முத்துக்குமரன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். வேளாண் முற்றம் இயற்கை விவசாய குழுவினர் மற்றும் இயற்கை வேளாண் விவசாயிகள் 15-க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைத்து அதில் அவர்கள் இயற்கையான முறையில் விளைவித்த அரிசி, நெல் உள்ளிட்ட தானிய பொருட்களைக் காட்சிப்படுத்தியிருந்தனர். இதில் குறிப்பாக ஆரோக்கியம் நிறைந்த பாரம்பரிய அரிசிகளான கருப்பு கவுணி, கருங்குறுவை, அறுபதாம் குறுவை, காட்டுயானம், பூங்கார், தூயமல்லி, சொர்ண மசூரி, சீரக சம்பா போன்ற 15க்கும் மேற்பட்ட பாரம்பரிய அரிசி வகைகள் மேலும் அரிசியை மதிப்புக்கூட்டி சூப் மிக்ஸ், இடியாப்ப மாவு, முறுக்கு மாவு, உப்புமா, ரவை அவல், இயற்கை லாலிபாப் இயற்கை லட்டு உருண்டை பீர்க்கங்காய் சாண்ட்விச் போன்றவை காட்சிப்படுத்தியிருந்தனர்.

அதே நேரத்தில் அடுப்பில்லா சமையல் என காய்கறிகளைக் கொண்டு இயற்கை முறையில் தயார் செய்த சமைக்காத காய்கறி உணவு வகைகளைக் கண்காட்சிக்கு வரும் பொது மக்களுக்கு வழங்கினார்கள். இந்த இயற்கை உணவுப் பொருள் கண்காட்சி சிதம்பரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு இயற்கை முறையில் விவசாயிகள் விளைவித்த உணவுப் பொருட்களை வாங்கிச் சென்றனர். இந்நிகழ்ச்சியில் இயற்கை பாரம்பரிய உணவுப் பொருட்களை வாங்க வரும் பொது மக்களுக்கு இயற்கை வேளாண் விவசாயிகள் சிவக்குமார், விஜயலட்சுமி, சுரேஷ்குமார், இயற்கை வேளாண் விவசாயி மற்றும் வீராணம் ஏரி ராதா மதகு வாய்க்கால் நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தின் தலைவர் ரங்கநாயகி மற்றும் விவசாயிகள் கோடி சுந்தரம், சங்கரா, அன்பரசன், பரத், ஸ்டாலின், சின்னப்பன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பாரம்பரிய உணவு வகைகள் குறித்தும் அதன் நன்மைகள் குறித்தும் தெளிவாக எடுத்துக் கூறினார்கள்.