சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ள ‘மகா கவிதை’ நூல் வெளியீட்டு விழா இன்று (01.01.2024) நடைபெற்றது. இந்த நூலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பெற்றுக் கொண்டார். இந்த நூல் வெளியீட்டு விழாவில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நூலில் பூதம், திசை, காலம், திணை, பூமி ஆகிய தலைப்புகளில் வைரமுத்து கவிதைகளை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “நான் கவிஞனும் அல்ல, கவிதை விமர்சகனும் அல்ல, கவிஞராகவும் கவிதை விமர்சகராக கோலோச்சிய கலைஞர் மட்டும் இருந்து இருந்தால் மகா கவிதை தீட்டிய வைரமுத்துவை உச்சி முகர்ந்து பாராட்டி இருப்பார். ஒரு கவிஞர் மற்றொரு கவிஞரை பாராட்ட மாட்டார். அப்படியே பாராட்டினாலும் விமர்சனம் செய்து பாராட்டுவார்கள். ஆனால் கலைஞர் கவிதை நன்றாக இருந்தால் பாராட்டுவார். வைரமுத்துவிற்கு கவிப்பேரரசு பட்டம் வழங்கியது முன்னாள் முதலமைச்சர் கலைஞர் தான். எல்லா நதியிலும் என் ஓடம் என வைரமுத்து சொல்லி கொண்டாலும் அவை வந்து சேரும் இடமாக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் இருந்தார்.
வைரமுத்து எழுதிய 15 புத்தகங்களை கலைஞர் வெளியிட்டார். கலைஞர் வாழக்கை வரலாற்றை கவிதையாக எழுத வேண்டும். இதை நீங்கள் செய்ய வேண்டும். இது உங்கள் ரசிகனின் வேண்டுகோள். இன்னும் உரிமையாக சொல்ல வேண்டும் என்றால் இது என் கட்டளை. கவிப்பேரரசு எழுதிக்கொண்டே இருக்க வேண்டும் அதனை நான் வெளியிட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்பது என் மகா ஆசை. படைப்பு தரமாக தயாரிப்பது போல புத்தகங்களை தயாரிப்பது இல்லை. ஆனால் வைரமுத்து படைப்பு போல தயாரிப்பிலும் கண்ணும் கருத்துமாக இருப்பார். தொல்காப்பியம் தொடங்கிய இடத்திற்கு தமிழ் இலக்கியத்தை கொண்டு வந்து நிறுத்தியுள்ளார் வைரமுத்து. வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கனமழை பெய்யும் என கூறினார்களே தவிர எவ்வளவு மழை பெய்யும் என கூறவில்லை. கடந்த 100 ஆண்டில் இல்லாத மழை, 170 ஆண்டுகள் இல்லாத மழை என கூறினார்கள். எதனால் இந்த கனமழை என கூறவில்லை. ஆனால் வைரமுத்து இந்த புத்தகத்தில் கூறியுள்ளார்.
மனிதன் இப்போது பூதங்களை தின்ன தொடங்கி விட்டான் அதனால்தான் பூதம் தற்போது மனிதனை தின்ன தொடங்கி விட்டன. மண்ணியல், விண்ணியல் மாற்றங்களை மனிதகுளம் பொருட்படுத்தாது போகின. ஐம்பூதங்களும் மனிதருக்கு எதிராக மாறிவிடும் என கூறுகிறார் அதுதான் உண்மை. மண், நீர், காற்று வானம் மாசு அடைந்துள்ளதால் சுற்றுச்சூழல் மாறியுள்ளது. ஐம்புலன்களை அடக்க முடியாது என கூறுவார்கள். ஆனால், தன் கவிதை மூலம் ஐம்புலன்களை இந்த புத்தகத்தில் வைரமுத்து அடக்கியுள்ளார். நவீன அறிவியலை சொல்ல திறன் உள்ளது தமிழ் மொழி என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த புத்தகம் அமைந்துள்ளது. மிக முக்கியமான காலகட்டத்தில் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார். புயலும் வெள்ளமும் சென்னை முதல் தென் மாவட்டம் வரை சுற்றி சூழல் அடித்த நேரத்தில் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார். ஏரி உடைவது போல வானம் உடைந்து கனமழை பெய்துள்ளது. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. சுற்றுச்சூழலில் தமிழ்நாடு அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள காலநிலை மாற்ற நிர்வாகக் குழு எனது தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.