கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சி சார்பில் கொரானா வைரஸ் தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட மருத்துவமனை, பெட்ரோல் பங்க், மெடிக்கல், வங்கிகள், வணிக நிறுவனங்கள் என அனைத்து இடங்களிலும் கிருமிநாசினி தொடர்ந்து தெளிக்கப்பட்டு வருகிறது.
இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் ஆய்வு செய்தார். பின்னர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு செய்தியாளர்களிடம் கூறுகையில் விரைவில் கொரானா வைரஸ் ஆய்வுக் கூடம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்படுகிறது.
இதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெறுகிறது. ஆய்வுக் கூடம் அமைக்கும் பணி ஒரு வாரம் நடைபெறும் பின்னர் ஊழியர்களுக்குப் பயிற்சி முடிந்தவுடன் வைரஸ் ஆய்வு தொடங்கபடும்.
ஊரடங்கு உத்தரவில் மாவட்ட நிர்வாகம் சிறப்பாகச் செயல்படுகிறது. ஊரடங்கு உத்தரவையொட்டி சில அத்தியாவசிய கடைகள் திறந்துள்ளது. இதில் வணிகர்கள் அதிக விலைக்கே அத்தியாவசியப் பொருட்கள் விற்பதாகத் தொடர்ந்து புகார் வந்த வண்ணம் உள்ளது. அவர்களைக் கண்டறியப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எனவே வணிகர்கள் மனிதநேயத்துடன் பொருள்களை விற்பனை செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து அம்மா உணவகத்தில் உணவுகளை ஆய்வுசெய்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினார். அப்போது உணவகத்திற்கு வந்த பொதுமக்களிடம் நன்கு கைகளைக் கழுவ வேண்டும் என்றும் அம்மா உணவகம் ஊரடங்கு உத்தரவு உள்ள வரை அனைவருக்கும் இலவச உணவு கொடுக்கும். இதனைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று பொதுமக்களிடம் கூறினார்.
மேலும் பொதுமக்களுக்கு உணவு இல்லை, வாகன வசதி உள்ளிட்ட எந்த ஒரு குறையாக இருந்தாலும் 1077 என்ற உதவி மைய எண்ணை தொடர்பு கொண்டால் அவர்களுக்கு வாகன வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்து தரப்படும் என்றார்.
பின்னர் சிதம்பரம் பேருந்து நிலையத்தில் தற்காலிக காய்கறி கடைகள் இடைவெளி விட்டு வைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதனை ஆய்வு செய்து பொதுமக்கள் ஒரு மீட்டர் இடைவெளியில் தூரத்தில் நின்று பொருட்களை வாங்க வேண்டும் என்றும், ஊரடங்கு உத்தரவை மீறி இளைஞர்கள் தேவையில்லாமல் சாலையில் சுற்றுவதை நிறுத்திக் கொள்ளவேண்டும், மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்தார். மேலும் பொதுமக்களும் அதிகம் வெளியில் வருவதைத் தவிர்த்து மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். நிகழ்ச்சியில் சிதம்பரம் சார் ஆட்சியர் விசு மகாஜன், சிதம்பரம் நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, பொறியாளர் மகாதேவன், சிதம்பரம் டிஎஸ்பி கார்த்திகேயன், நகராட்சி பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் உடன் இருந்தனர்.