
புதுக்கோட்டையில் கடந்த சில வருடங்களாக கனரா வங்கி, திருவிதாங்கூர் வங்கி, பஞ்சாப் நேஷ்னல் வங்கி... இப்படி பல வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள் ஆகியவற்றில் பொதுமக்கள் அடகு வைத்துள்ள தங்க நகைகள் கிலோ கணக்கில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்ந்து நடந்துள்ளது. இந்த வங்கிகளில் வேலை செய்த சிலர் மர்மமாக உயிரிழந்துள்ளனர். சில வங்கிகளில் நகைகள் மீட்கப்படாமலேயே உள்ளன. இந்தநிலையில்தான், தற்போது எச்டிபி வங்கியில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்திருந்த 304.625 பவுன் தங்க நகைகளைக் காணவில்லை.
இதன் மதிப்பு ரூபாய் 1 கோடி. இங்கு திருடிய நகைகளை மற்றொரு தனியார் நிதி நிறுவனமான இன்டல் மணி என்ற நிதி நிறுவனத்தில் அடகு வைத்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இரு நிதி நிறுவன மேலாளர்கள் உட்பட 4 ஊழியர்களைக் கைது செய்த காவல்துறையினர் நகைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து விபரம் அறிந்த காவல்துறையினர் கூறும்போது, "ஒவ்வொரு வங்கி, நிதி நிறுவனத்திலும் ஆண்டு தணிக்கை செய்வது வழக்கம். அதேபோல்தான் புதுக்கோட்டை எச்டிபி நிறுவனத்திலும் ஆண்டுத் தணிக்கை நடந்துள்ளது. தணிக்கை முடிவில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்திருந்த 304.625 பவுன் தங்க நகைகளைக் காணவில்லை என்பது தெரிய வந்தது. அதன் பிறகு எச்டிபி திருச்சி மண்டல மேலாளர் ரமேஷ், காவல்துறையில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் கிளை மேலாளர் உமாசங்கர் (வயது 42), நகைக் கடன் பிரிவு சோலைமணி (வயது 37), தனிநபர் கடன் பிரிவு முத்துக்குமார் (வயது 27) ஆகியோர் இணைந்து தங்கள் வங்கியில் வாடிக்கையாளர்கள் அவசரத்திற்கு அடகு வைத்த தங்க நகைகளைத் திருடி, தங்கள் கூட்டாளியான இன்டல் மணி நிதி நிறுவன மேலாளர் மாரிமுத்துவுடன் இணைந்து இன்டல் மணி நிதி நிறுவனத்தில் அடகு வைத்து, பணம் எடுத்து சந்தோசமாக இருந்துள்ளனர். சுமார் 77 முறை அடகு வைத்துள்ளனர். இடையில், ஆண்டுத் தணிக்கைக்கு வருவதாக தகவல் கிடைத்தால், திருடிய நகைகளைக் கொண்டு போய் வைத்து சரி செய்து கொண்டனர்.

ஆனால் இந்தமுறை தணிக்கைக்கு முன்பு தகவல் சொல்லாமல் வந்ததால் சிக்கிக்கொண்டனர். தற்போது எச்டிபி வங்கியில் திருடிய நகைகளை இன்டல் மணி நிதி நிறுவனத்தில் இருந்து மீட்ட காவல்துறையினர், அனைத்தையும் சரிபார்த்து நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர். மேலும் வங்கி வாடிக்கையாளர்களின் தங்க நகைகளைத் திருடி, அடகு வைத்து மோசடி செய்த இரண்டு நிதி நிறுவனங்களின் மேலாளர்கள் உட்பட 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்" என்றனர்.
இதேபோல் மற்ற வங்கிகளிலும் திருடப்பட்ட நகைகளை மீட்டு நடவடிக்கை எடுத்தால் நல்லது. வங்கி அதிகாரிகள், அலுவலர்களே வாடிக்கையாளர்களின் நகைகளைத் திருடிய சம்பவம், வாடிக்கையாளர்களிடையே வங்கி மீதான நம்பிக்கையை இழக்கச் செய்து, அச்சமடைய செய்துள்ளது.