தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில், கடந்த 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாகக் கடுமையாக பாதிக்கப்பட்டு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மேலும் சில இடங்களில் மழைப்பொழிவு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்தநிலையில் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பொழிந்து வருகிறது. தஞ்சை அம்மாபேட்டை, ஒரத்தநாடு, திருவையாறு உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது. அதேபோல் மயிலாடுதுறையில் மணல்மேடு, சீர்காழி, தரங்கம்பாடி, செம்பனார்கோவில் உள்ளிட்ட இடங்களில் மழை பொழிந்து வருகிறது. கும்பகோணம், திருவிடைமருதூர், அம்பாசமுத்திரம், திருநாகேஸ்வரம், தாராசுரம் உள்ளிட்ட பகுதிகளிலும், நாகையில் நாகூர், சிக்கல், பொரவச்சேரி, திருமருகல், போலகம், நரிமணம், உத்தமசோழபுரம் உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது.
கன்னியாகுமரியில் சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்ட நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர் வரத்து குறைந்ததால் நான்கு நாட்களுக்கு பிறகு திற்பரப்பு அருகில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நான்காவது நாளாக குளிக்கத் தடை நீடிக்கிறது.
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 139.85 அடி அடியாக உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 2,023 கன அடியாக உள்ளது. அணையில் நீர் திறப்பு 300 கன அடியாக உள்ளது. நீர் இருப்பு 7,088 மில்லியன் கன அடியாக உள்ளது. அதேபோல் வைகை அணையின் நீர்மட்டம் 69.42 அடியாக உள்ளது. நீர்வரத்து 2,187 கன அடியாக உள்ளது. அணையின் நீர் திறப்பு வினாடிக்கு 2,319 கன அடியாக உள்ளது. நீர் இருப்பு 5,681 மில்லியன் கன அடியாக உள்ளது.