பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் 'ஒத்த ஓட்டு முத்தையா'. இப்படத்தை சாய் ராஜகோபால் இயக்கியுள்ள நிலையில் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சிங்கமுத்து, சித்ரா லட்சுமணன், ரவி மரியா, வையாபுரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அரசியலும் காமெடியும் கலந்த இந்த திரைப்படத்தை சினி கிராஃப்ட் புரொடக்ஷன் நிறுவனம் மற்றும் குட்டி ஸ்டோரி பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்க சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார்.
இப்படம் வருகிற 14ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்ற நிலையில் அதில் படக்குழுவினருடன் இயக்குநர் கே. பாக்யராஜ், இயக்குநர் பி. வாசு, தயாரிப்பாளர் கே. ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் கவுண்டமணி பேசுகையில், “இந்தப் படம் குடும்பத்துடன் காண வேண்டிய படம். இயக்குநர் பி. வாசுவிற்கு நன்றி. என்னுடைய ரூம் மேட் பாக்யராஜுக்கும் நன்றி. தயாரிப்பாளர் கே ராஜன் என் நண்பர் தான். அவருக்கும் என் நன்றி. இயக்குநர், இசையமைப்பாளர் மற்றும் நடித்த நடிகர்கள் நடிகைகள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த விழாவிற்கு வருகை தந்திருக்கும் ரசிகர்கள், வருகை தராமல் வீட்டில் இருக்கும் ரசிகர்கள், வெளியூரில் இருக்கும் ரசிகர்கள், வெளிநாட்டில் இருக்கும் ரசிகர்கள், ஹாலிவுட்டில் இருக்கும் ரசிகர்கள் என அத்தனை பேருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த 'ஒத்த ஓட்டு முத்தையா'வை பாருங்கள். இந்த 'ஒத்த ஓட்டு முத்தையா'வை நன்றாக பாருங்கள். இந்த 'ஒத்த ஒட்டு முத்தையா'வை திரும்பத் திரும்ப பாருங்கள். நான் திரும்பவும் சொல்கிறேன். 'ஒத்த ஒட்டு முத்தையாவை பாருங்கள். திரும்பத் திரும்ப சொல்கிறேன். 'ஒத்த ஓட்டு முத்தையா'வை பாருங்கள். திரும்பிப் பார்த்துவிட்டும் சொல்கிறேன். 'ஒத்த ஓட்டு முத்தையா'வை பாருங்கள். பார்க்க மறந்து விடாதீர்கள். இந்த 'ஒத்த ஒட்டு முத்தையா'வை வெற்றி ஓட்டு முத்தையாவாக மாற்றுங்கள். அது உங்கள் கடமை. அது உங்களுடைய பொறுப்பும் கூட” என அவரது ஸ்டைலில் கலகலப்புடன் பேசினார்.