Skip to main content

ஓய்வூதியத் திட்டங்கள்; தமிழக அரசு சார்பில் குழு அமைப்பு!

Published on 05/02/2025 | Edited on 05/02/2025

 

pension schemes Committee organization on behalf of the Tamil Nadu government

தமிழக அரசின் நிதி நிலையினையும், அரசுப் பணியாளர்களின் ஓய்வூதியக் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு நடைமுறைப்படுத்தத் தக்க உரிய ஓய்வூதிய முறை குறித்து பரிந்துரையினை அரசிற்கு அளித்திட அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றைத் தமிழக அரசு  சார்பில் அமைத்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “கடந்த 01.04.2003 முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்குப் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதே வேளையில் மத்திய அரசுப் பணியாளர்களுக்குத் தேசிய ஓய்வூதியத் திட்டம் (National Pension System) 01.01.2004 முதல் அறிமுகப்படுத்தப்பட்டது.

இருப்பினும் மாநில அரசுப் பணியாளர்களுக்குத் தொடர்ந்து பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமே தொடர அனுமதிக்கப்பட்டது. எனினும் மாநில அரசுப்பணியாளர்கள் 01.04.2003க்கு முன்பிருந்த திட்டத்தைச் செயல்படுத்திட வேண்டித் தொடர்ந்து கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர். இந்நிலையில், 24.01.2025 அன்று மத்திய அரசுப் பணியாளர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. எனவே,  பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திட ஒரு குழு அமைத்திட அரசு முடிவு செய்துள்ளது.

மாநில அரசின் நிதி நிலையினையும், பணியாளர்களின் ஓய்வூதியக் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு நடைமுறைப்படுத்தத் தக்க உரிய ஓய்வூதிய முறை குறித்து பரிந்துரையினை அரசிற்கு அளித்திட அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி, மெட்ராஸ் ஸ்கூஸ் ஆப் எக்னாமிக்ஸ்  (Madras School of Economics) கல்வி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் கே.ஆர். சண்முகம், நிதித் துறையின் துணைச் செயலாளரும்(வரவு செலவு), உறுப்பினர் செயலருமான பிரத்திக் தாயள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இக்குழு தனது விரிவான அறிக்கை மற்றும் பரிந்துரையினை ஒன்பது மாதங்களுக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்