Skip to main content

லட்சக்கணக்கில் பணம்; அப்பாவி தம்பதிகளை ஏமாற்றிய கருத்தரிப்பு மையம் - அம்பலமான உண்மை

Published on 01/04/2023 | Edited on 01/04/2023

 

conception center that cheated so many couples by taking lakhs of money

 

குழந்தையில்லாமல் ஏக்கத்தில் இருந்த அப்பாவி தம்பதிகள் பிரபல கருத்தரிப்பு மையத்தை நம்பி பல லட்சங்களை இழந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள பணகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார். முத்துக்குமாருக்கு கடந்த 2015 ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது. ஆனால், கடந்த 6 வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் முத்துக்குமாரும் அவரது மனைவியும் மிகுந்த ஏக்கத்தில் இருந்து வந்துள்ளனர். குழந்தை வரம் வேண்டி கோயில், குளம் எனச் சுற்றிய பிறகும் எந்தப் பயனும் இல்லை என்று சொல்லப்படுகிறது. 

 

இந்நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டில் டிவியில் வந்த ஒரு தனியார் கருத்தரிப்பு மையம் குறித்த விளம்பரங்களை பார்த்துள்ளனர். அதில், சிலருடைய போட்டோக்களை வைத்து, "வெறும் 99 ஆயிரம் ரூபாய் செலவில் குழந்தையில்லாத இவர்களுக்கு எங்களுடைய ஏ.ஆர்.சி. கருத்தரிப்பு மையம் மூலம் குழந்தை பிறந்துள்ளது" எனப் பல்வேறு விளம்பரங்களை செய்துள்ளனர்.

 

இதை உண்மை என நம்பிய அப்பாவி தம்பதி, நாகர்கோவிலில் உள்ள அந்த கருத்தரிப்பு மையத்திற்கு சென்றுள்ளனர். அங்கே முத்துக்குமாரிடமும் அவரது மனைவியிடமும் ஐ.வி.எஸ். டெஸ்ட் எடுக்க வேண்டும் எனச் சொல்லி ஆரம்பத்திலேயே 99 ஆயிரம் ரூபாய் வாங்கியுள்ளனர்.  அந்த பரிசோதனை முடிவில், "உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நூறு சதவீதம் குழந்தை பிறக்க வாய்ப்பு இருக்கிறது" எனக் கூறியுள்ளனர். அதன்பிறகு, “உங்களுக்கு இரட்டைக்குழந்தை வேண்டுமென்றால் 2 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் செலவாகும்" எனக் கூறியுள்ளனர். அதையும் உண்மை என நம்பிய முத்துக்குமார் தம்பதி, குழந்தையின் மேல் கொண்ட ஆசையில் அந்த பணத்தையும் கொடுத்துள்ளனர்.

 

இதையடுத்து, அந்த கருத்தரிப்பு மையம் தங்களது வேலையைக் காட்ட ஆரம்பித்துள்ளது. முத்துக்குமார் தம்பதியை கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேல் இழுத்தடித்துள்ளனர். ஒருபுறம், ஏராளமான டெஸ்டுகளை எடுக்கச் சொல்லி எக்கச்சக்க பணத்தை பிடுங்கியுள்ளனர். இவர்களும் குழந்தையின் மேல் கொண்ட ஆசையால் அக்கம்பக்கத்தில் கடன் வாங்கியும் நகைகளை விற்றும் 11 லட்சம் வரை செலவு செய்துள்ளனர். அதே சமயம், முத்துக்குமார் தம்பதியுடன் சேர்த்து அந்த கருத்தரிப்பு மையத்தில் மொத்தம் 9 பேர் குழந்தை பாக்கியம் தேடி வந்துள்ளனர். அவர்களுக்கும் அதே நிலைமை தான்.

 

இதில், கடைசிக்கட்டமாக கருமுட்டையை வைத்து பரிசோதனை செய்ததில் முத்துக்குமார் தம்பதிக்கு நெகடிவ் என்று ரிசல்ட் வெளியாகியுள்ளது. அவர்களுக்கு மட்டுமல்ல, அங்கிருந்த 9 பேருக்கும் ஒரே தகவலை தெரிவித்துள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தவர்கள் என்ன செய்வதெனத் தெரியாமல் திகைத்துப் போயுள்ளனர். வாங்கிய கடனிற்கு பதில் சொல்ல முடியாமல் கண்ணீர் விட்டுக் கதறியுள்ளனர். அதே சமயம், பணத்திற்காக இத்தகைய விஷயங்களை ஆரம்பத்தில் இருந்தே அந்த கருத்தரிப்பு மையம் மறைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம். அனைவரும் பல லட்சங்களை இழந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட பிரச்சனையில் ஒரு தம்பதியின் வாழ்க்கை விவாகரத்து வரை சென்றுள்ளது.

 

இது குறித்து அந்த கருத்தரிப்பு மையத்திடம் விளக்கம் கேட்டபோது, "எங்களோட ட்ரீட்மென்ட்ல எந்த தவறுமில்ல. எங்க ஹாஸ்பிட்டல்ல பேஷண்ட்டோட உடல்நிலைய பொறுத்துத்தான் ட்ரீட்மெண்ட் கொடுப்போம். அது சில பேருக்கு சக்ஸஸ் ஆகியிருக்கு. சில பேருக்கு பெயிலியர் ஆகியிருக்கு" எனக் கூறி முடித்துக் கொண்டனர். ஆனால், குழந்தை ஆசையால் பணத்தை இழந்தவர்கள் கண்களில் கண்ணீரோடு பரிதவித்து நிற்கின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்