விழுப்புரம் மாவட்டம் கொங்கராயனூர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன். இவரது மனைவி பேபி (வயது 45). இவர் மகன் எழில் குமார் (வயது 18). இவர்கள் இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் தேதி தங்களுக்கு சொந்தமான கரும்பு வயலுக்கு பம்பு செட் மூலம் தண்ணீர் பாய்ச்ச சென்றனர். நீண்ட நேரம் ஆகியும் வீட்டுக்கு வந்து சேரவில்லை. மறுநாள் மதியம் வரை தாயும் மகனும் வீட்டுக்கு வராததால் சந்தேகமடைந்த சாமிநாதன் மற்றும் அவரது உறவினர்கள் தாயையும் மகனையும் தேடி கரும்புத் தோட்டத்திற்கு சென்றனர். அங்கு தாயும் மகனும் இறந்து கிடந்தனர்.
இது குறித்து திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரது இறப்பு குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த பாஸ்கர், பாபு ஆகிய இருவரும் தங்கள் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள கரும்பை காட்டு பன்றிகள் அழித்து வருவதாக கூறி கரும்பு வயலை பாதுகாக்க வேண்டி மின்சார வேலி அமைத்துள்ளனர். மின்சார வேலி இருப்பது தெரியாமல் பக்கத்து வயலில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த பேபியும், அவரது மகன் எழில்குமாரும் மின்சார வேலியில் சிக்கி இறந்தது தெரிய வந்து பாஸ்கர், பாபு ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
இது சம்பந்தமான வழக்கு விசாரணை விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி பாக்கிய ஜோதி தீர்ப்பளித்தார். அவரது தீர்ப்பில் "மின்சார வேலி அமைத்து இருவரது உயிர் பிரிய காரணமாக இருந்த நில உரிமையாளர் பாஸ்கருக்கு ஏழாண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மற்றொரு குற்றவாளியான பாபு குடும்பப் பிரச்சனை காரணமாக 2021 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டதால் அவர் இந்த வழக்கில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சிறைத் தண்டனை பெற்ற நில உரிமையாளர் பாஸ்கரை பாதுகாப்புடன் போலீசார் கடலூர் மத்திய சிறையில் கொண்டு சென்று அடைத்தனர்.