![thermal](http://image.nakkheeran.in/cdn/farfuture/21CC0ws0Z5TjB3hHUkMsF-j3RQIWoSTfLk8mUL4w0q0/1537919430/sites/default/files/inline-images/000000.jpg)
மேட்டூர் அனல்மின் நிலையத்தில் இரண்டு டிவிஷன்களாக பிரிக்கப்பட்டு மின்சாரம் உற்பத்தி நடந்து வருகிறது. முதல் டிவிஷனில் தலா 210 மெகாவாட் மின்சார உற்பத்தித் திறன் கொண்ட நான்கு யூனிட்டுகள் செயல்படுகின்றன. இரண்டாவது டிவிஷனில் ஒரு யூனிட் உள்ளது. இதில் நாளொன்றுக்கு 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.
மேட்டூர் அனல்மின் நிலையத்தில் உள்ள ஐந்து யூனிட்டுகள் மூலமாக தினமும் 1440 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இதற்காக நாளொன்றுக்கு 24 ஆயிரம் டன் நிலக்கரி தேவை.
இந்நிலையில், தமிழகத்திற்காக நிலக்கரி ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்ததாலும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததாலும், மேட்டூர் அனல்மின் நிலையத்தில் இருப்பு வைக்கப்பட்டிருந்த நிலக்கரி வேகமாக தீர்ந்தது.
இதனால் கடந்த 15ம் தேதி, முதல் டிவிஷனில் உள்ள மூன்றாவது யூனிட்டில் மின்சாரம் உற்பத்தி செய்வது நிறுத்தப்பட்டது. 16ம் தேதி, இரண்டாவது யூனிட்டிலும், 19ம் தேதி இரண்டாவது டிவிஷனில் உள்ள ஒரு யூனிட்டிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் மின்வெட்டு பெரிய அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், நிலக்கரி விநியோகம் படிப்படியாக வந்து கொண்டிருந்தது. இதையடுத்து 20ம் தேதி, முதல் டிவிஷனில் 3வது யூனிட்டிலும், அன்று இரவு இரண்டாவது டிவிஷனிலும் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டது.
தற்போது, மேட்டூர் அனல்மின் நிலையத்தில் 1.25 டன் நிலக்கரி கையிருப்பு உள்ளதால், அனைத்து யூனிட்டிலும் வழக்கம்போல் முழுவீச்சில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. தினமும் 24 ஆயிரம் டன் நிலக்கரி விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.