Skip to main content

"பாஜக அரசு விசாரணை அமைப்புகள் மூலமாகத் தாக்குதலை நடத்தி வருகிறது" - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

Published on 14/06/2023 | Edited on 14/06/2023

 

communist party of india press statement about senthibalaji issue

 

கடந்த எட்டு நாட்களாக நடந்த வருமானவரிச் சோதனை, 18 மணி நேரங்களுக்கு மேலாக நடந்த அமலாக்கத்துறை சோதனையை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் திமுக நிர்வாகிகள், அமைச்சர்கள் மருத்துவமனையில் குவிந்துள்ளனர். இதன் காரணமாக மருத்துவமனையில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை குறித்து பல்வேறு அமைச்சர்களும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

 

இன்று காலை முதலே அமைச்சர்கள் பொன்முடி, சேகர்பாபு, கே.என். நேரு. உதயநிதி, ரகுபதி என பல்வேறு துறை அமைச்சர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை சந்தித்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்து கருத்துக்களைத் தெரிவித்துவிட்டுச் சென்ற நிலையில் தற்பொழுது தமிழக முதல்வர், அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார்.

 

இந்நிலையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அமைச்சர் செந்தில் பாலாஜி  கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "செந்தில் பாலாஜி கைது அப்பட்டமான அதிகார அத்துமீறல். மத்திய அரசின் அமலாக்கத்துறையினர் தமிழ்நாடு அரசின் மின்சாரம் மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை இன்று (14.06.2023) அதிகாலை 2 மணிக்கு கைது செய்துள்ளனர். கடந்த சில வாரங்களாக அவர் மீது குறி வைத்து நடத்தப்படும் சோதனை தாக்குதலால் அவர் மன உளைச்சலுக்கும், அலைச்சலுக்கும் ஆளாகி மன அழுத்தம் அதிகரித்து கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார்.

 

ஒருவர் மீது புகார் எழுமானால் அதனை விசாரித்து, குற்றத்தை உறுதி செய்து, தண்டனை வழங்கும் முறை சட்டத்தின் ஆட்சியில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் மத்திய பாஜக அரசு சட்டத்தின் ஆட்சியை அடியோடு தகர்த்து வருகிறது. பல கட்சி ஆட்சி முறையை அனுமதிக்கும் ஜனநாயக முறையை நிராகரித்து, ஒரு நபரை மையப்படுத்தும் சர்வாதிகாரம் கட்டமைக்கப்பட்டு வருகிறது. மக்கள் ஆட்சியை உறுதி செய்துள்ள அரசியல் அமைப்புச் சட்டம் சிறுமைப்படுத்தப்படுகிறது. மாநிலங்கள் இணைந்த ஒன்றியம் என்ற கூட்டமைப்புக் கோட்பாடு தகர்க்கப்பட்டு எதிர்க்கட்சிகள் மீது தாக்குதல் நடத்தும் கருவிகளாக விசாரணை அமைப்புகள் மாற்றப்பட்டுள்ளன.

 

காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர் ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் உரிமை பறிக்கப்பட்டது. டெல்லி துணை முதலமைச்சர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேற்கு வங்கத்தில் மாநில அமைச்சர்கள் மிரட்டப்படுகின்றனர். தெலுங்கானா முதலமைச்சர் அச்சுறுத்தப்படுகிறார். இதன் தொடர்ச்சியாகவே தமிழ்நாட்டிலும் மத்திய பாஜக  அரசு ஆளுநர் மாளிகை வழியாகவும், விசாரணை அமைப்புகள் மூலமாகவும் தாக்குதலை நடத்தி வருகிறது. பாஜகவின் நிர்பந்தத்திற்கு பணிந்து மாநில உரிமைகளைப் பறிகொடுத்து மத்திய அரசின் பல்லக்குத் தூக்கியாக நடந்த அதிமுக அரசை அகற்றி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அமைத்து தமிழ்நாட்டின் மக்களின் பேராதரவைப் பெற்று ஆட்சி அமைத்துள்ள திமுக அரசுக்கும், ஜனநாயக சக்திகளுக்கும் விடப்பட்ட சவாலாகும்.

 

தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மக்களின் பேராதரவோடு அமைத்துள்ள திராவிட முன்னேற்றக் கழக அரசை மிரட்டும் மத்திய பாஜக அரசின் அப்பட்டமான அதிகார அத்துமீறல் நடவடிக்கையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்