
வேலூரில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரி ஒன்றியில் அன்பழகன் என்பவர் துணை முதல்வராகவும், பொருளாதாரத்துறை தலைவராகவும் பணியாற்றி வருகிறார். இவர் அதே கல்லூரியில் பணியாற்றும் பெண் கவுரவ விரிவுரையாளர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பெண் கவுரவ விரிவுரையாளர் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்.பி. மதிவாணனிடம் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் லதாவிற்கு உத்தரவிட்டார். அதன்பேரில் 7 பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கல்லூரி மாணவர்கள் பாலியல் புகாரில் சிக்கிய கல்லூரி துணை முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதற்காக அனைத்து மாணவர்களும் ஒன்றாக கல்லூரி வளாகத்தில் திரண்டு கோஷங்களை எழுப்பினர்.
இதையடுத்து கல்லூரி நிர்வாகம் சார்பில் இரண்டு கதவுகளும் பூட்டப்பட்டது. மாணவர்கள் தரப்பில் கதவுகளை திறக்குமாறு கோரிக்கை வைத்தனர். ஆனால், கல்லூரி நிர்வாகம் கதவைத் திறக்க மறுத்துவிட்டது. இதனால் அத்திரத்தின் உச்சிக்கே சென்ற மாணவர்கள் கல்லைக் கொண்டு பூட்டை உடைத்து கதவைத் திறந்து ஊர்வலமாக சென்று அண்ணா சாலையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் ஆய்வாளர் லதா மாணவர்களிடம் நடத்தப் பேச்சுவார்த்தையின் காரணமாக கலைந்து சென்றனர்.