
நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 16 ஆம் தேதி இரவு 8.40 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் கோவில் பட்டி அருகே சென்றுகொண்டிருந்த போது, இளையரசனேந்தல் சுரங்கப்பாதை அருகே சென்றுகொண்டிருந்த போது, திடீரென ரயில் மீது பலத்த சத்தத்துடன் கல் விழுந்துள்ளது. இதில் பி2 ஏசி கோச் பெட்டியின் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதனைத் தொடர்ந்து அதிர்ச்சியடைந்த பயணிகள் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து, கோவில்பட்டி ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து இளையரசனேந்தல் ரயில்வே சுரங்க பாலம் பகுதியில் பதிவாகி இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் கோவிபட்டி நடராஜபுரத்தை சேர்ந்த கணேசன் மகன் சூர்யா(24) என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவரை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில், சம்பவத்தன்று மனைவியுடன் தகராறு செய்துவிட்டு சுரங்க பாலத்தின் மேல் பகுதியில் தண்டவாளம் அருகே தனிமையில் அமர்ந்து சரக்கு அடித்து கொண்டிருந்ததாகவும், அப்போது அவ்வழியாக கடந்து சென்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ட்ரெயினின் ஹாரன் சவுண்ட் டிஸ்டர்ப்பாக இருந்து மன அமைதியை குலைத்ததால் கடுப்பாகி போதையில் கல்லெறிந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஏற்கனவே கடந்த 10 ஆம் தேதி திருநெல்வேலி - சென்னை வந்தே பாரத் ரயில் கடம்பூர் அருகே தங்கம்மாள்புரம் லெவல் கிராசிங் கேட் அருகே கடந்து சென்ற போது, மர்ம நபர்கள் கல் வீசினர். இதில் சி1 கோச்சில் கல் விழுந்ததில் ஜன்னல் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த தூத்துக்குடி ரயில்வே பாதுகாப்புப் படை இன்ஸ்பெக்டர் கண்ணன், விசாரணை நடத்தி வருகிறார்.
கோவில்பட்டி - திருநெல்வேலி இடையே ஓடும் ரயில்கள் மீது அடுத்தடுத்து நடைபெற்று வரும் கல் வீச்சு சம்பவங்கள் பயணிகளுக்கு அச்சுறுத்தலாகவும், ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் ரயில்வே போலீசாருக்கும் பெரும் தலைவலியாகவும் உருவெடுத்துள்ளது.
செய்தியாளர் - எஸ். மூர்த்தி