


தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை, கடந்த 18ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அன்று மாலை நடைபெற்ற அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் வரும் மார்ச் 24ஆம் தேதி வரை பேரவையை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 19ஆம் தேதி நடப்பாண்டிற்கான வேளாண் பட்ஜெட் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இரண்டாவது முறையாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில், தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை தொடர்பாக விவாதம் நடைபெற்றுவருகிறது. கடைசி நாளான 24ஆம் தேதி பட்ஜெட் மீதான விவாதத்திற்குத் தமிழக முதல்வர் பதிலுரை ஆற்றுகிறார். 24ஆம் தேதி கேள்வி பதில் கிடையாது. மற்ற நாட்களில் கேள்வி பதில் இருக்கும் அவை நேரலையாக ஒளிபரப்பப்படும் என அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பட்ஜெட் விவாதத்தைக் காண சென்னை ராணிமேரி அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் இன்று சட்டமன்றத்திற்கு வந்தனர்.