கோவை மாவட்டம், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த 23ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று வெடித்து சிதறியது. இதில் இருந்த ஜமேசா முபீன் என்பவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை மீட்ட காவல்துறையினர் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து பின்னர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர்.
சம்பவம் நடந்த 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமைக்கு முன் தினமான சனிக்கிழமை 22ம் தேதி நள்ளிரவில் ஜமேசா முபீன் தன் வீட்டிலிருந்து ஒரு மர்மப் பொருளை ஐந்து பேருடன் எடுத்துச் சென்றது அவர் வீட்டுப் பகுதியில் அமைந்துள்ள சி.சி.டி.வி காட்சிகளில் பதிவாகியுள்ளது. அந்த சி.சி.டி.வி காட்சிகளின் உதவியோடு காவல்துறையினர் ஜமேசா முபீனுடன் இருந்த ஐந்து பேரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் இன்று தற்பொழுது செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அசிஸ்டன்ட் கமிஷனர் ஆப் போலீஸ் உக்கடம் மூலம் புலன் விசாரணை மேற்கொண்டு உடனடியாக அந்தப்பகுதி காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தடயங்களை பாதுகாத்து தடயவியல் வல்லுநர்களை வரவழைத்து, கைரேகை பிரிவு, மோப்பநாய் பிரிவு ஆகிய அறிவியல் பூர்வமான அனைத்து புலன் விசாரணை நடவடிக்கைகளை எடுத்து, அந்த நபர் யார் என்பது மிக விரைவாக கண்டுபிடிக்கப்பட்டது.
குறிப்பாக 12 மணி நேரத்தில் அந்த நபரை கண்டுபிடித்து அவர் யார் என்ற அடையாளம் தெரிய வந்தது. அவர் பயன்படுத்திய மாருதி 800 வாகனம் பத்து கைகளை மாறி வந்திருக்கிறது. அந்த 10 பேரையும் உடனடியாக கண்டறிந்து யாரிடம் இருந்து இந்த கார் வாங்கப்பட்டது என்று கண்டுபிடிக்கப்பட்டு மாலைக்குள் கார் எங்கிருந்து வந்தது என்பது கண்டறியப்பட்டது. நீதிமன்றத்திற்கு தகவலளித்து உடனடியாக இறந்து போன முபீனுடைய வீட்டை சோதனை செய்து அந்த சோதனையில் பல பொருட்கள் கைப்பற்றப்பட்டன. உடனடியாக கைப்பற்றப்பட்ட பொருட்களை நீதிமன்றத்திற்கும் அனுப்பி உள்ளோம். அதன் தொடர்ச்சியாக புலன் விசாரணை நடைபெற்று வந்தது. அசிஸ்டன்ட் கமிஷனர் சீப் இன்வெஸ்டிகேஷன் ஆபீஸர் ஆகவும், அவருக்கு உதவி செய்வதற்கு ஆறு காவல் ஆய்வாளர்கள் உதவி புரியக்கூடிய அணிகளாகவும் செயல்பட்டு வந்தனர். டெபுட்டி கமிஷனர் ரேங்கில் உள்ள அதிகாரியின் நேரடி மேற்பார்வையிலும் சூப்பர்வைஸ் செய்து கொண்டிருந்தேன்.
ஏடிஜிபி, டிஜிபி அவர்களும் விரைந்து வந்து சம்பவ இடத்தைப் பார்த்தார்கள். இந்த புலன் விசாரணையின் அடிப்படையில் நேற்று இரவு 5 நபர்களை கைது செய்துள்ளோம். இது தொடர்பான தகவல்கள் ஏற்கனவே பத்திரிகைகளுக்கும், ஊடகங்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்தவுடன் புலன் விசாரணை அடிப்படையில் வழக்கு எஃப்ஐஆரில் பதிவு செய்யப்பட்ட சட்டப்பிரிவுகள் மாற்றப்பட்டு இப்பொழுது யுஏபிஏ சேர்க்கப்பட்டு புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே வழக்கு பதிவு செய்தபோது 174 மற்றும் செக்ஷன் 3ஏ சட்ட பிரிவுகள் பயன்படுத்தப்பட்டிருந்தன. நேற்று இரவு குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட பின்பு இறந்துபோன முபீன் ஏ1 என்றும் அதனைத் தொடர்ந்து குற்றவாளிகள் அதில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிந்தது. இதில் உள்ள கூட்டுச்சதியை தெரிந்துகொண்டு கூட்டுச்சதிக்கான 120 பி மற்றும் இரண்டு பிரிவினர்களுக்கிடையே ஒரு விரோதத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் இந்த செயல் இருந்ததற்காக 153 ஏ செக்ஷன் ஐபிசி, வெடிபொருட்களை பயன்படுத்தி வெடிக்கப்பட்டதால் யுஏபிஏ (உபா) சட்டத்தையும் சேர்த்திருக்கிறோம்.
கைது செய்யப்பட்டவர்கள் இன்று மாலை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்படுவார்கள். இந்த வழக்கு தொடர்பாக இருபதுக்கும் மேற்பட்ட நபர்களை ஏற்கனவே விசாரணை செய்து இருக்கின்றோம். தொடர்ந்து விசாரணை மற்றும் வீட்டு சோதனை நடைபெற்று வருகிறது. சந்தேகப்படக் கூடிய நபர்களை விசாரித்தும், அவர்களது வீடுகளை சோதனையிட்டும், அவர்களுடைய நடவடிக்கைகளை கண்காணித்தும் காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. முந்தாநாள் 23ஆம் தேதி காலை இந்த சம்பவம் நிகழ்வதற்கு முன்பு போலீஸ் பீட் மற்றும் அதிகாரிகள் இருந்திருக்கிறார்கள். நான்கு மணிக்கு இந்த சம்பவம் நிகழ்ந்த பொழுது உடனடியாக காவல்துறையினர் பார்த்து தீயணைப்பு துறைக்கு தகவல் சொல்லி மேற்கொண்டு எந்த சேதமும், உயிரிழப்பும் ஏற்படாதவாறு உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். இந்த வழக்கில் இதுவரை செய்துள்ள புலன் விசாரணை அடிப்படையில் காவல் அதிகாரிகள் அருகில் உள்ள பீட்டில் இருந்ததால் இந்த வாகனம் மேற்கொண்டு செல்லாமல் அங்கேயே வெடித்திருக்குமோ என்ற தகவலும் தெரிய வருகிறது. அதைப் போல இந்த சம்பவம் நடந்து இது தொடர்பாக எந்தவித சட்ட ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படாதவாறு நகரத்தில் பல்வேறு இடங்களிலும் பீட்ஸ் மற்றும் பேட்ரோல் போட்டு வாகன தணிக்கை செய்து வருகிறோம்.
கோவை மாநகருக்கு முக்கியமாக அருகில் உள்ள ஒப்பனக்கார ஸ்ட்ரீட் உள்ளிட்ட பகுதிகளில் எல்லாம் அதே நாள் லட்சக்கணக்கான மக்கள் தீபாவளி பண்டிகைக்காக வந்து சென்றார்கள். எந்த ஒரு அசம்பாவிதமும் இல்லை. ஆகவே சம்பவம் நடந்தவுடன் உடனடியாக அதற்கு நடவடிக்கை எடுத்து ஒரே சட்டப்பிரிவுகள் மாற்றம் செய்து தொடர்ந்து புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கூட்டுச்சதியில் வேறு யாருக்கு சம்பந்தம் இருக்கிறது? எங்கெங்கெல்லாம் அவர்களுக்கு தொடர்பு இருக்கிறது என்பதை எல்லாம் தொடர்ந்து புலன் விசாரணை செய்து வருகின்றோம். விசாரணையின் அடிப்படையில் அவ்வப்போது கண்டிப்பாக பத்திரிகைக்கும், பொது மக்களுக்கும் தகவல் அளிக்கப்படும்'' என்றார்.