Skip to main content

பழுதாகி பாதியில் நின்ற தானியங்கி மஞ்சள் பை இயந்திரம்; மீண்டும் செயல்படுமா?

Published on 23/09/2024 | Edited on 23/09/2024
Cm Yellow Bag Scheme Automated Machine in Chidambaram Municipality

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகள் அன்றாட வாழ்வில் கலந்துள்ளது. இது, நிலம், நீர், வாய்க்கால், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு வகையில் பாதிப்பை ஏற்படுத்தி வந்ததால் தமிழக அரசு சுற்றுச்சூழலை பாதிக்கும் 40 மைக்ரனுக்கு குறைவான பாலித்தின் பை மற்றும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடந்த 4  ஆண்டுகளுக்கு முன்பு தடை விதித்தது. இதனால் ஒரு முறை பயன்படுத்தித் தூக்கி எறியக்கூடிய 14 வகையான பிளாஸ்டிக் பை மற்றும் பொருட்களை பயன்படுத்தத் தடை உள்ளது.

இந்த நிலையில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பை திட்டம் தமிழக முதல்வரால் கொண்டுவரப்பட்டது.  இந்த திட்டத்தால் அனைத்து பகுதிகளிலும் பிளாஸ்டிக் பைகள் தவிர்க்கப்பட்டதுடன் அதற்கு மாற்றாக துணி போன்ற சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத பொருட்களையும், பைகளையும் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது. பின்னர் இந்த திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்குக் கடந்த ஆண்டு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சுற்றுசூழைலை பாதுகாக்க மஞ்சள் பைகளை வழங்கி மஞ்சள் பை திட்டத்தைத் துவக்கி வைத்தார். இதற்கு பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு பிளாஸ்டிக் பைகள் கடைகளில் பறிமுதல் செய்யப்பட்டு தடையை மீறி பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்யும் கடைக்காரர்கள் மீது அபராதம் வசூலிக்கப்பட்டது. மீண்டும் விற்பனை செய்யும் கடைக்காரர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. பின்னர் பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் ஆபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து  மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் மஞ்சள் பைகளை வழங்குவதற்கான தானியங்கி இயந்திரம் வைக்க அரசு உத்தரவிட்டது. இதில் அனைத்து தரப்பு மக்களும் ரூ 5 செலுத்தி மஞ்சப்பைகளைப் பெற்று பிளாஸ்டிக் பை இல்லாமல் அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை அவசர நேரத்தில் வாங்கிச் சென்றனர்.

இதேபோல் சிதம்பரம் நகராட்சியிலும் மக்கள் கூடும் இடங்களில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரம் வைக்கப்பட்டது. இயந்திரம் வைக்கப்பட்டு ஒரு சில வார காலத்திலே சிதம்பரம் நகராட்சி நிர்வாகம் சரியான முறையில் இயந்திரத்தைப் பராமரிக்காததால் இயந்திரம் பழுது ஏற்பட்டு பூட்டு போடப்பட்டுள்ளது.  இதனால் பொதுமக்கள் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரம் இயங்காததால் மீண்டும் கடைகளில் வழங்கும் பிளாஸ்டிக் பைகள் மூலம் பொருட்களை வாங்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.  இதனால் மீண்டும் சுற்றுசூழலுக்கு ஆபத்து ஏற்படுத்தும் சூழல் உள்ளதால் விரைவில் மஞ்சப்பை தானியங்கி இயந்திரம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் மல்லிகா கூறுகையில், “வடக்குவீதியில் பொதுப்பணித்துறை சார்பிலும், கீழவீதியில் நகராட்சி சார்பில் மஞ்சள் பை தானியங்கி இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் செயல்பட உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். 

சார்ந்த செய்திகள்