தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம் மரத்துரை வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி சிவரஞ்சனி (வயது 28). கர்ப்பிணிப் பெண்ணான இவர் கடந்த 2ஆம் தேதி பிரசவத்திற்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து மருத்துவர்கள் சிவரஞ்சனிக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யாமல் நான்கு நாட்கள் வரை சுகப்பிரசவத்திற்காகக் காத்திருந்தனர்.
இத்தகைய சூழலில் தான் கடந்த 6ஆம் தேதி சிவரஞ்சனிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அப்போது குழந்தையின் உடலில் எவ்வித அசைவும் இல்லாமல் இருந்ததால் அங்கிருந்து குழந்தையைச் சிதம்பரம் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இருப்பினும் குழந்தை சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தது. அதனைத் தொடர்ந்து குழந்தை இறந்தது தொடர்பாகக் குழந்தையின் தந்தை, உறவினர்கள், பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மருத்துவமனையின் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சிவரஞ்சனிக்கு பிரசவம் பார்த்த மகப்பேறு மருத்துவர் ரம்யாவை தற்காலிக பணிநீக்கம் செய்து மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். குழந்தையின் தந்தை மற்றும் உறவினர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் மருத்துவர் ரம்யா தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இறந்த விவகாரம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.