தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையால் அந்தப் பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாகப் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, கடந்த 2018ம் ஆண்டு மே 22ம் நாள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 11 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் என 13 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் பலத்த காயங்களை அடைந்தனர். அதனைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூடத் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து, ஸ்டெர்லைட் மீதான தடை உத்தரவை நீக்கி மீண்டும் திறக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணை உச்சநீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நடைபெற்றது. இதனையடுத்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி மறுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் (29.02.2024) அதிரடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது.
இத்தகைய சூழலில் தான், ‘ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்க முடியாது’ என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி வேதாந்தா குழுமத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க கோரி வேதாந்தா குழுமத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.