கடந்த மாதம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்தினருடன் ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி திருமலைக்குச் சென்று தரிசனம் செய்து விட்டுச் சொந்த ஊரான எடப்பாடிக்கு திரும்பினார்.
ஆந்திரா மாநிலம் திருப்பதியில் இருந்து சித்தூர் வழியாகத் தமிழகத்தின் வேலூர் மாநகருக்குள் வந்து சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆம்பூர், வாணியம்பாடி வழியாகச் சேலத்திற்கு பயணம் மேற்கொண்டார். அப்படிப் பயணம் மேற்கொள்ளும் பொழுது ஒவ்வொரு பகுதியிலிருந்தும் கட்சியினர் முதலமைச்சர் பழனிசாமிக்கு வரவேற்பு அளித்தனர்.
வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சரான நிலோபர் கபில் தலைமையிலான அதிமுகவினர் முதல்வருக்கு உற்சாக வரவேற்பை அளித்தனர். வரவேற்புக்கு எதிர்பார்த்த அளவுக்கு தொண்டர்கள், பொதுமக்கள் வரவில்லை என்றதும் என்ன செய்யலாம் என யோசித்து அருகிலிருந்த வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரிக்கு அமைச்சரே ஓடிச்சென்று நிர்வாகத்திடம் பேசி கல்லூரியில் வகுப்புகள் நடந்து கொண்டிருந்த சூழ்நிலையில் வகுப்புகளை நிறுத்திவிட்டு முதல்வரை வரவேற்க மாணவிகளை அழைத்துவந்து நெடுஞ்சாலையில் நிறுத்தினார்.
முதல்வர் சென்றபின் அங்கிருந்து மாணவிகள் மீண்டும் கல்லூரிக்கு வந்தனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் வெளியே தெரிந்ததும் வாணியம்பாடி நகரைச் சேர்ந்த சபியுல்லா என்பவர் சில தினங்களுக்கு முன்பு கல்லூரிக்கு நேரடியாகச் சென்று, கல்லூரி முதல்வர் மற்றும் நிர்வாகத்திடம் என் மகளைக் கல்லூரியில் படிக்கத் தான் அனுப்பினேன் கூட்டங்களுக்கு அனுப்ப இல்ல, நீங்கள் என் மகளை அரசியல் கூட்டத்துக்கு எதற்காக அனுப்பினீர்கள் எனக் கேள்வி எழுப்பியதாகவும் இதற்கு கல்லூரி நிர்வாகம் சரியாகப் பதில் சொல்லவில்லையாம். ஒருவர் இப்படி வந்து கல்லூரி நிர்வாகத்திடம் கேள்வி கேட்பதாகக் கல்லூரி நிர்வாகம் அமைச்சருக்குத் தகவல் கூறியுள்ளனர்.
இந்நிலையில் மார்ச் 17- ஆம் தேதி வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் சபியுல்லா ஒரு புகார் தந்துள்ளார். அந்த புகாரை காவல்துறை அதிகாரிகள் பதிவு செய்யாததால் தனது மனைவியுடன் காவல்நிலையம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் எழுதியுள்ள புகார் மனுவில், என் மகளை ஏன் முதல்வரை வரவேற்கும் அரசியல் கூட்டத்திற்கு அனுப்பினீர்கள் எனக் கேள்வி எழுப்பினேன். அந்தத் தகவலை கல்லூரி நிர்வாகம் அமைச்சர் நிலோபர் கபிலிடம் கூறியுள்ளது. அவர் என்மீது கோபமாகி தன்னுடைய ஆதரவாளர்களான வாணியம்பாடி அதிமுக நகரச் செயலாளர் சதாசிவம், சுபான் போன்றவர்களை ஏவி விட்டதாக தெரிகிறது. அவர்கள் எப்படிக் கேள்வி கேட்கலாம் என என்னை மிரட்டுகின்றனர். கொலை செய்து விடுவேன் என மிரட்டி விட்டுச் செல்கின்றனர். என் உயிருக்கு ஏதாவது நடந்தால் இவர்களே பொறுப்பு. இவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகார் தந்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.