தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னை உள்ளிட்ட மழை பாதித்த இடங்களில் வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு, பல இடங்களில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்லத் திரும்பி வருகின்றனர்.
இந்த நிலையில் மழை பாதிப்பு காரணமாக மாநில முழுதுவம் நாளை நடைபெறுவதாக இருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மழை வெள்ளத்தால் பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்களை இழந்த மாணவர்களுக்கு செவ்வாய் கிழமை அன்று வழங்க உத்தரவு அளிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் நலன் கருதி நாளை தொடங்க இருந்த அரையாண்டு தேர்வுகள் புதன்கிழமை முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரையாண்டு தேர்வுகளுக்கான புதிய அட்டவணையை வெளியிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக அரையாண்டு தேர்வு கடந்த 7 ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மழை பாதிப்பின் காரணமாக 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் நடக்க இருந்த தேர்வுகள் மட்டும் தள்ளிவைக்கப்பட்டு மற்ற தேர்வுகள் நாளை முதல் தொடங்குவதாக இருந்தது. இந்த நிலையில்தான், மற்ற மாணவர்களை போல், புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களும் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்று நாளை நடைபெறவுள்ள தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.