Skip to main content

“மகத்தான திட்டத்தைக் கொண்டு வந்தவர் கலைஞர்” - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு!

Published on 26/02/2025 | Edited on 26/02/2025

 

CM MK Stalin says kalaignar came up with a grand plan

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக 2 ஆயிரத்து 642 பேர் மருத்துவ அலுவலர்களாக தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி சென்னை திருவான்மியூரில் இன்று (26.02.2025) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

அப்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “உயிர்காக்கக்கூடிய மருத்துவர்களை, மக்கள் மிகவும் உயர்வாக பார்க்கிறார்கள். தமிழ்நாடு இன்றைக்கு இந்தியாவின் மருத்துவத் தலைநகராக இருக்கிறது என்றால், அதற்கு திமுக ஆட்சிக் காலங்களில் தலைவர் கலைஞர் உருவாக்கிய மருத்துவக் கட்டமைப்பு தான் அதற்கு காரணம் என்பது நன்றாக தெரியும். மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரிகள், நகரங்கள் தோறும் அரசு மருத்துவமனைகள், கிராமங்கள் தோறும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், பெரிய நகரங்களில் பன்னோக்கு மருத்துவமனைகள், உயிர்காக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், 108 ஆம்புலன்ஸ் சேவை என்று கலைஞர் உருவாக்கிய கட்டமைப்புதான் மருத்துவ சேவையில் தமிழ்நாட்டை இந்த அளவுக்கு உயர்த்தியிருக்கிறது.

இந்தக் கட்டமைப்பு சரியான முறையில் செயல்படவேண்டும் என்றால், நிச்சயமாக அதற்கேற்றது போல டாக்டர்கள் தேவை. அதுவும் அரசாங்க மருத்துவமனைக்கு வரக்கூடிய ஏழை, எளிய கிராமப்புற நோயாளிகளை, கர்ப்பிணிப் பெண்களை, குழந்தைகளின் உடல் நோய்களை மட்டுமல்ல, அவர்களின் மனநிலை, புறச்சூழல் இதையும் புரிந்துகொள்ளக் கூடிய டாக்டர்கள் தேவை. நகரங்களிலிருந்தும் டாக்டர்கள் கிராமத்திலிருந்தும், சின்னச் சின்ன உருவானால்தான் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நல்ல முறையில் சிகிச்சை கிடைக்கும்.

அதைப் புரிந்துகொண்டுதான், முதல் தலைமுறை பட்டதாரிகளின் மருத்துவப் படிப்புக்கான கல்விக் கட்டணத்தை அரசாங்கமே ஏற்றுக்கொள்ளும் என்கிற மகத்தான திட்டத்தைக் கொண்டு வந்தவர் கலைஞர். இன்றைக்கு சிறிய, சிறிய நகரங்களிலிருந்தும் கூட, இத்தனை டாக்டர்கள் உருவாகி இருக்கிறீர்கள் என்றால் அதற்கெல்லாம் வித்திட்டவர் கலைஞர். அவரது வழியில், திராவிட மாடல் அரசு மருத்துவக் கட்டமைப்பை இந்திய அளவில் மட்டுமல்ல, உலக அளவில் அனைவரும் பாராட்டக்கூடிய அளவில் இன்றைக்கு உருவாக்கியிருக்கிறோம்” எனப் பேசினார். 

சார்ந்த செய்திகள்