தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய தேதி தேர்தல் அட்டவணையை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகவில்லை.
தமிழக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி இன்று (07.12.2019) மாலை 04.30 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறும் என்று அறிவித்துள்ளார். இதில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், நெல்லை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தென்காசி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாது.
வேட்பு மனுத்தாக்கல் டிசம்பர் 9- ஆம் தேதி முதல் தொடங்கிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய டிசம்பர் 16- ஆம் தேதி கடைசி நாள் ஆகும். வேட்பு மனு மீதான பரிசீலனை டிசம்பர் 17- ஆம் தேதி நடைபெறும் என்றும், வேட்பு மனுக்களை திரும்ப பெற டிசம்பர் 19- ஆம் தேதி கடைசி நாளாகும் என்று அறிவித்துள்ளார். தேர்தல் நாளன்று வாக்குப்பதிவு காலை 07.00 மணிக்கு தொடங்கி மாலை 05.00 மணிக்கு நிறைவடையும். பதிவான வாக்குகள் 02.01.2020 அன்று எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் வெளியிடப்படும் என தெரிவித்தார்.
உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பையடுத்து 9 மாவட்டங்களை தவிர 27 மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிமுறை தொடரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஊராட்சி மன்றத் தலைவர், மாவட்ட ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவரை தேர்ந்தெடுக்க ஜனவரி 11 ஆம் தேதி மறைமுக தேர்தல் நடைபெறுகிறது.
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 37,380 பதவிகளுக்கு டிசம்பர் 27- ஆம் தேதி முதற்கட்ட தேர்தலும், 38,914 பதவிகளுக்கு டிசம்பர் 30- ஆம் தேதி இரண்டாம் கட்டத் தேர்தலும் நடைபெறவுள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்காக 49,688 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்படுகின்றன.
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப் வழங்கப்படுகிறது. அதேபோல் நான்கு விதமான நிறங்களில் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படுகிறது. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்பட்டுள்ளதாகவும், இடஒதுக்கீடு பணிகள் அனைத்தும் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
நகர்ப்புற பகுதிகளுக்கும் விரைவில் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். நிர்வாகக் காரணங்களுக்காகவே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தற்போது நடத்தப்படவில்லை. உச்சநீதிமன்ற உத்தரவு மாநில தேர்தல் ஆணையத்திற்கு பின்னடைவு இல்லை என தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. மேலும் மாநில தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. நியாயமான முறையில் தேர்தல் நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று கூறியுள்ளது.