முதலீடுகளை ஈர்க்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (27.08.2024) இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் அமெரிக்கா செல்கிறார். அதாவது தமிழகத்திற்கு பல்வேறு தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ, சிகாகோவில் உள்ள பல முக்கிய நிறுவனங்களின் தொழிலதிபர்களைச் சந்திக்க உள்ளார். அப்போது முதல்வரின் தலைமையில் முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
இந்நிலையில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின், ‘கடல் கடந்து சென்றாலும் கவனமெல்லாம் தமிழ்நாட்டில்தான்’ என்ற தலைப்பில் திமுக தொண்டர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில், “ அன்னை நிலம் பயன் பெறுவதற்கான பயணங்களில் ஒன்றாக, உங்களில் ஒருவனான நான் அமெரிக்காவுக்குப் பயணிக்கிறேன். ஆகஸ்ட் 29 சான் பிரான்சிஸ்கோவில் முதலீட்டாளர்களுடன் சந்திப்பு. ஆகஸ்ட் 31 புலம்பெயர்ந்த தமிழர்களுடன் சந்திப்பு. செப்டம்பர் 2 சான் பிரான்சிஸ்கோவிலிருந்து சிகாகோ பயணம். 10 நாட்களுக்கு அமெரிக்காவில் உள்ள முக்கிய நிறுவன முதலீட்டாளர்களைச் சந்தித்து, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கிறேன்.
‘ஃபார்ச்சூன் 500’ நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளைச் சந்தித்து உரையாடவிருக்கிறேன். செப்டம்பர் 7ஆம் நாள் சிகாகோவில் தமிழர்களுடனான மாபெரும் சந்திப்பு. ஆகஸ்ட் 27 தொடங்கி செப்டம்பர் 14 வரையிலான இந்தப் பயண நாட்களின் நோக்கம், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி அடுத்து வரும் பல தலைமுறைகளுக்குப் பயன் தருவதாக இருக்கவேண்டும் என்பதுதான். முதலமைச்சர் அயல்நாடு சென்றிருந்தாலும், தமிழ்நாட்டில் எந்தவொரு பணியும் தடைப்படாமல் நடைபெறுகிறது என்று மக்கள் தரும் சான்றிதழே திராவிட மாடல் அரசுக்குப் பெருமை சேர்ப்பதாகும். அந்தச் சான்றிதழை அமைச்சர்களும், திமுக நிர்வாகிகளும் பெற்றுத் தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்தான் பொறுப்பை உங்களிடம் பகிர்ந்து செல்கிறேன்.
ஆட்சிப் பணியும், கட்சிப் பணியும் தொய்வின்றித் தொடர்வதற்கு ஏற்ற வகையில் ஒருங்கிணைப்புக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றுடன் ஒருங்கிணைந்து ஒவ்வொருவரும் தங்கள் கடமையினைக் கண்ணியத்துடன் நிறைவேற்ற வேண்டும். கட்டுப்பாடு காக்கின்ற வகையில், செயலில் வேகம் - சொற்களில் கவனம் என்பதை மனதில் நிறுத்திச் செயலாற்றுங்கள். கலைஞரின் தொண்டர்களான உங்கள் மீது உங்களில் ஒருவனான எனக்கு நிறைந்த நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கை செயல்வடிவமாக மாறுவதை ஒவ்வொரு நாளும் தொடர்பு கொண்டு விசாரிப்பேன். பணிகளைக் கண்காணிப்பேன். தமிழ்நாடு சிறக்க அயல்நாட்டுக்குச் சிறகு விரிக்கிறேன். உங்கள் வாழ்த்துகளுடன் பறக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.