
அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கூர்ந்தாய்வு குழு அமைக்க வேண்டும் என பல்கலைக்கழக ஊழியர்களின் போராட்ட களத்தில் சிந்தனைச் செல்வன் எம் எல் ஏ கோரிக்கை வைத்துள்ளார்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அனைத்து நிலை ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழக அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஓய்வு பெற்ற ஆசிரியர் மற்றும் ஊழியர்களுக்கு அனைத்துவிதமான பயன்களையும், பண பலன்களையும் உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து 11-வது நாளாக இரவு பகல் பாராமல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு தமிழக முதல்வர் சரியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தினந்தோறும் நடைபெறும் போராட்டத்தில் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் 11 வது நாள் போராட்ட களத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக கல்வி குழு உறுப்பினரும் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினருமான சிந்தனைச் செல்வன் கலந்து கொண்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசினார். அப்போது அவர், “பாரம்பரியமிக்க அண்ணாமலை பல்கலைக்கழகத்தை சீர்படுத்த நிதிச் சிக்கலை காரணம் காட்டாமல் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 11 நாட்களாக மூத்த குடிமக்களாக உள்ளவர்கள் போராட்டத்தை அமைதி வழியில் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்தை தமிழக அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளோம். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஊழியர்களின் கோரிக்கை மற்றும் பல்கலைகழகத்திற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தும் வகையில் கூர்ந்தாய்வு குழு ஒன்று அமைக்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்தும் போராட்டம் குறித்தும் 24ஆம் தேதி நடைபெறும் உயர் கல்வித்துறை மானிய கோரிக்கையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பேசப்படும். போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நல்ல தீர்வை ஏற்படுத்தும் விதமாக முத்தரப்பு பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்படும்” என்றார்.