Skip to main content

என்எல்சி நிறுவனத்தை கண்டித்து சிஐடியு தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்

Published on 14/01/2024 | Edited on 14/01/2024
CITU union protest against NLC

நெய்வேலியில் உள்ள என்எல்சி நிர்வாகத்தில் ஏற்படுத்தப்பட்ட பல்வேறு குளறுபடிகளைக் கண்டித்து சிஐடியு தொழிற்சங்கம் மெயின் பஜாரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. இதில் கலந்துகொண்ட சங்கத்தின் தலைவர் ஜெயராமன் மற்றும் பொதுச்செயலாளர் அரசு ஆகியோர் போராட்டம் குறித்துப் பேசுகையில், “என்எல்சி நிறுவனத்தில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொழிலாளர், பொறியாளர், அதிகாரிகளுக்கு ஒரே மாதிரியான விடுப்புதான் வழங்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் சென்ற மாதம் திடீரென பொறியாளர் - அதிகாரிகளுக்கு மட்டும் சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ‘ஒரு கண்ணில் வெண்ணெய் மற்றொரு கண்ணில் சுண்ணாம்பு’ என்ற நிர்வாகத்தின் இந்நடவடிக்கை தொழிலாளர் மத்தியில் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அலுவலகத்தில் இரண்டாம் சனிக்கிழமை விடுமுறையை பயன்படுத்துபவர்களை தவிர்த்து சுரங்கம் மற்றும் தெர்மல் பகுதியில் 3 ஷிப்ட் ஆபரேஷனில் பணியாற்றுபவர்களுக்கு 8 நாட்களும், மூன்று ஷிப்ட் மெயின்டணன்ஸில் பணியாற்றுபவர்களுக்கு 7 நாட்களும் மற்ற அனைத்து பகுதிகளுக்கும் 6 நாட்கள் பொறியாளர் - அதிகாரிகளுக்கு மேற்கண்ட விடுப்பு Earn Leave அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு வரை சுரங்கத்தில் பணியாற்றிய ஆப்ரேஷன் தொழிலாளர்களுக்கு மாதத்திற்கு 3 நாள், மெயின்டனன்ஸ் மற்றும் NSU, தெர்மல் பகுதி தொழிலாளர்களுக்கு 2 நாள் என C-Off வழங்கப்பட்டு வந்தது. 2015 ஜூன் மாதத்தில் நிறுத்தப்பட்ட பிறகு OH விடுப்பு 5 நாட்கள் தொழிலாளர் - பொறியாளர் - அதிகாரிகளுக்கு சமமாக வழங்கப்பட்டது. C-Off பொறியாளர்களுக்கு கிடையாது.

ஊதிய உயர்வு மற்றும் UIS ஒப்பந்தம் கூட 2017 முதல் தொழிலாளர் - பொறியாளர்-அதிகாரிகளுக்கு ஏறக்குறைய ஒரே மாதிரியாகத்தான் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் பொறியாளர் - அதிகாரிகளுக்கு மட்டும் சிறப்பு விடுமுறை பர்னிச்சர் கடன் அநியாயமாகும். ஒரே நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர் - பொறியாளர் மத்தியில் வித்தியாசத்தையும், பேதத்தையும் ஏற்படுத்திடும் நிர்வாகத்தின் நடவடிக்கை கண்டனத்துக்குரியது.

சில மாதங்களுக்கு முன்பு பர்னிச்சர் கடன் கொடுக்கப்பட்டது முதல் இன்று வரை பேச்சுவார்த்தையிலுள்ள சங்கங்கள் வாய்மூடி மவுனியாக இருப்பதன் மர்மம் என்ன? தொழிலாளர்களுக்கு மறுக்கப்பட்டுள்ள விடுப்பு, பர்னிச்சர் லோன் உள்ளிட்டவைகளை பெறுவதற்கு ஏன் குரல் எழுப்பவில்லை. பேச்சுவார்த்தை சங்கங்களின் இந்த மௌனம் தொழிலாளர்களை வேதனை அடைய செய்துள்ளது.

எனவே இரண்டாம் சனிக்கிழமை விடுமுறைக்கு பதிலாக அளிக்கப்படும் ஸ்பெஷல் அடிஷனல் லீவை 12-ஆக அளித்திடு! பர்னிச்சர் லோன், லேப் டாப், மொபைல் போன் உள்ளிட்ட சலுகைகளை வழங்கிடு! மிகை நேர பணிக்கு சி ஆப் வழங்கிடு என வலியுறுத்தி நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர் - ஊழியர்கள் திரளாக பங்கேற்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

வெளிமாநில இடமாற்றம்: நிறுவனத்தில் தொழிலாளர் - ஊழியர்களை பொறுத்தவரையில் நெய்வேலிக்கு வெளியே இடமாற்றம் செய்யும் நடைமுறை கிடையாது. ஆனால் சில தினங்களுக்கு முன்பு 6 பேர் வெளி மாநிலங்களுக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. நிர்வாகத்தின் இந்நடவடிக்கையை பேச்சுவார்த்தை சங்கங்கள் தட்டிக் கேட்காமல் இருப்பது மவுனம் சம்மதத்திற்கு அறிகுறியாகிவிடும். வரும் காலத்தில் நிர்வாகம் தொழிலாளர்களை வெளி மாநிலங்களுக்கு பந்தாடுவதற்கு வழிவகுத்திடும் என்று சிஐடியு எச்சரிக்கை விடுக்கிறது. 60 ஆண்டுகளாக கடைப்பிடித்து வரும் நடைமுறையை தொடர்ந்திட வேண்டும் எனவும், போடப்பட்டுள்ள வெளிமாநில இடமாற்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டுமெனவும் சிஐடியு கேட்டுக் கொள்கிறது” என்றார்.

சார்ந்த செய்திகள்