மின்வாரிய துறை தனியார் மயமாவதை கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் மின்சார ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாண்டிச்சேரி உள்ளிட்ட 9 யூனியன் பிரதேசங்களில் மின் வினியோகத்தை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், மாநில மின் வாரியங்களை பிரிக்கக் கூடாது, மின் வினியோகத்தை தனியார் மயமாக்க கூடாது, 2020 மின்சார சட்டத்திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய அனைத்து தொழிற் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
அதன்படி விளாத்திகுளம் மின் விநியோகம் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தூத்துக்குடி மாவட்ட சிஐடியூ சங்க பொருளாளர் யோவான் தலைமை வகித்தார். சிஐடியூ ஊரக கோட்ட செயலாளர் பெருமாள்சாமி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய தமிழ்நாடு மின் ஊழியர்கள் மத்திய அமைப்பின் சி.ஐ.டி.யூ. வின் யோவான், "இந்த மின்சார சட்டத் திருத்த மசோதா நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில் விவசாயம் மற்றும் சிறுகுறு தொழில்களின் இலவச மின் விநியோகம் பறிக்கப்பட்டுத் தொழில்கள், விவசாயம் போன்றவைகள் நலிவடையத் தொடங்கிவிடும். பொதுமக்களின் மின் நுகர்வுக் கட்டணமும் ஏறிவிடுவதால் பொது மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் பாதிப்பிற்குள்ளாவதோடு வாரியத்தின் தொழிலாளர்களின் நலனும் உரிமையும் பறிபோய்விடும்" என்றார்.