புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வட்டம் பறையாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் சஞ்சய் திருப்புனவாசல் தனியார்ப் பள்ளியில் 11-ம் வகுப்பும், மகள் சஞ்சனா 10-ம் வகுப்பும் படித்து வந்தனர். கடந்த 14ம் தேதி மாலை பள்ளி முடிந்து அவர்களது சித்தப்பா இளையராஜாவோடு இருசக்கர வாகனத்தில் பள்ளியிலிருந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த பொழுது பறையாத்தூர் அருகே மின்னல் தாக்கி 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மின்னல் தாக்கி உயிரிழந்த இவர்களுக்கான அரசு பேரிடர் நிவாரண நிதி தலா ரூ.4 லட்சம் வீதம் 3 பேருக்கும் ரூ.12 லட்சம் ரூபாய்க்கான காசோலையை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கினார். நிவாரணம் வழங்கியபோது உறவினர்கள் கதறி அழுததைப் பார்த்துக் கண்கலங்கிய அமைச்சர் அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரகுபதி, “தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க 24 மணி நேரத்தில் இறந்தவர்களுக்கு வாரிசு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் இயற்கை பேரிடர் நிதியும் உடனடியாக வழங்கப்பட்டது. மின்னல் தாக்கி உயிரிழந்த இளையராஜாவின் மனைவிக்கு முதலமைச்சரிடம் தகவல் கூறி மாவட்ட நிர்வாக ஒப்புதலுடன் கருணை அடிப்படையில் அரசு வேலை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்” என்றார்.