![Child rescued as a corpse ... Parents in grief ..!](http://image.nakkheeran.in/cdn/farfuture/CbkAxUlH5hDylFhYCQp2Mji6QTUIQ3wDHLj70s5dJM0/1611209209/sites/default/files/inline-images/th-1_428.jpg)
கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அருகில் உள்ளது மாளிகை கோட்டம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி மணிவண்ணன், சங்கீதா. இவர்களின், ஒன்றரை வயது மகன் இரணியன். இச்சிறுவன் நேற்று (20.01.2021) மதியம் ஒரு மணி அளவில் வீட்டின் வெளியே விளையாடியிருக்கிறார். வெகுநேரமாகியும் சிறுவனைக் காணவில்லை என பெற்றோர்கள், உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் ஆகியோர் அப்பகுதியில் தேடிப் பார்த்துள்ளனர்.
ஆனால், குழந்தை கிடைக்கவில்லை. ஒன்றரை வயது குழந்தை நீண்டதூரம் எங்கும் சென்றிருக்க முடியாது என ஊரைச் சுற்றிலும் தேடிவந்தனர். இரவு முழுவதும் தேடியும் குழந்தை கிடைக்காததால், வேதனையில் அச்சிறுவனின் பெற்றோர்கள் வாடினார்கள். இந்த நிலையில், இன்று அதிகாலை அந்த ஊர் அருகே தண்ணீர் செல்லும் வாய்க்காலில் குழந்தை இரணியனை சடலமாக கண்டெடுத்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த பெண்ணாடம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்து வருகின்றனர். வெலிங்டன் ஏரியில் இருந்து சமீபத்தில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அந்த தண்ணீர், இந்த வாய்க்கால் வழியேதான் செல்கிறது. வீட்டுக்கு அருகே விளையாடிக்கொண்டிருந்த குழந்தை, வழித்தவறி வாய்க்கால் தண்ணீரில் இறங்கி மூழ்கி இறந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
ஒன்றரை வயது குழந்தை இறந்து கிடந்த சம்பவம் அந்த கிராம மக்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.