
சேலம் மாவட்டம் ஆத்தூரில் மே 24ம் தேதி நடக்கும், திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.
திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள், தமிழகம் முழுவதும் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் ஓயாத உழைப்பின் ஓராண்டு சாதனை என்ற தலைப்பில் நடத்தப்பட்டு வருகின்றன. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள செல்லியம்பாளையத்தில் மே 24ம் தேதி, அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடக்கிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
இதையொட்டி அவர், 24ம் தேதி விமானம் மூலம் சேலம் வருகிறார். காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் பொதுக்கூட்டம் நடக்கும் இடத்திற்குச் செல்கிறார். முதல்வர் வருகையையொட்டி, பொதுக்கூட்டத்திற்கான மேடை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு தலைமையில் சேலம் மாவட்ட திமுக நிர்வாகிகள் மேற்பார்வையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.