Skip to main content

புயலுக்கு சாய்ந்த தென்னை மரங்களை தூள்களாக்கும் நவீன இயந்திரம் வேண்டும்...விவசாயிகள் கோரிக்கை!!

Published on 20/12/2018 | Edited on 20/12/2018

கஜா புயலால் சாய்ந்த தென்னை மரங்களை வெட்டி அகற்றுவது சிரமமாக இருப்பதால் மரங்களை தூள்களாக அரைக்கும் நவீன இயந்திரம் கீரமங்கலம் சுற்றுவட்டார பகுதிக்கு அரசு வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

kaja

 

நவம்பர் 16 ந் தேதி அதிகாலை வீசிய கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டத்தில் தென்னை, தேக்கு, பலா, வாழை உள்ளிட்ட மரங்கள் அடியோடு சாய்ந்து கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தோட்டங்களில் சாய்ந்து கிடக்கும் மரங்களை வெட்டி அகற்ற முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் தோட்டங்கள் முழுவதும் மரங்கள் சாய்ந்து கிடப்பதால் தோட்டங்களை சீரமைத்து மறுபடியும் மரக்கன்றுகள் நடவு செய்ய முடியாமலும் தவிக்கின்றனர். மேலும் தென்னை போன்ற மரங்களை வெட்டி அகற்ற செலவு அதிகமாக உள்ளதாலும் வெட்டப்படும் மரங்களை எங்கே போடுவது என்ற நிலையில் அனைத்து தோட்டங்களிலும் தென்னை மரங்கள் அகற்றப்படாமல் அப்படியே கிடக்கிறது. 

 

 

ஒரு சில சாலையோர தோட்டங்களில் செங்கல் சூளை, மற்றும் காங்கிரீட் பலகைக்காக மதுரை, தர்மபுரி ஆகிய ஊர்களுக்கு மரங்களை வெட்டி எடுத்துச் சென்றாலும் அதன் பிறகு தென்னை மரங்களின் அடி, மற்றும் நுணி பகுதிகளை அகற்ற முடியாமல் தோட்டங்களிலேயே கிடக்கிறது. கிராமங்களுக்குள் உள்ள தோட்டங்களில் யாரும் மரங்களை வெட்டி எடுத்துச் செல்லவும் முன்வரவில்லை. 

 

இந்த நிலையை பார்த்து புதுக்கோட்டை மாவட்டம் நெய்வத்தளியில் உருவான நமது நண்பர்கள் விவசாய மீட்புக்குழுவினர் ஒரு சில தோட்டங்களில் கிடக்கும் மரங்களை வெட்டி அகற்ற அந்தந்த தோட்டங்களின் வரப்புகளில் வைத்து வருகின்றனர்.

 

kaja

 

ஆனால் தற்போது தென்னை மரங்களை நவீன இயந்திரங்கள் மூலம் தூள்களாக்கி அகற்றும் பணிகள் டெல்டா மாவட்டங்களில் வந்துள்ளது. அதனால் அந்த நவீன இயந்திரம் கீரமங்கலம், வடகாடு, மாங்காடு, மேற்பனைக்காடு மற்றும் சுற்றியுள்ள விவசாயிகளுக்கு அரசாங்கம் இலவசமாக அனுப்பினால் விரைவில் தோட்டங்களில் கிடக்கும் தென்னை மரங்களை அகற்றி மறுநடவுக்கு தோட்டங்களை தயார் செய்யலாம் என்கின்றனர் விவசாயிகள்.

 

 

இது குறித்து கீரமங்கலம் பகுதி விவசாயிகள் கூறும்போது.. தோட்டங்களில் விழுந்துகிடக்கும் தென்னை மரங்களை வெட்டி அகற்ற ஒரு மரத்திற்கு ரூ. ஆயிரம் வரை செலவாகிறது. மேலும் அதற்கான ஆள் பற்றாக்குறையும் உள்ளது. அப்படியே வெட்டி அகற்றினாலும் தோட்டங்களின் வரப்புகளில் மட்டுமே குவித்து வைக்க வேண்டியுள்ளது. 

 

ஆனால் வெளிநாடுகளில் இதுபோல சாய்ந்த தென்னை மரங்களை அகற்ற நவீன இயந்திரம் உள்ளது. அதாவது சாய்ந்து கிடக்கும் தென்னை மரங்களை அந்த இயந்திரத்திற்குள் விட்டால் கதிர் அடிப்பது போல மரங்களை மரத்தூள்களாக வெளியே தள்ளுகிறது. அந்த தூளை தோட்டங்களில் உரமாகவும் பயன்படுத்தலாம். மரங்கள் மற்றும் மட்டைகளையும் தூள்களாக்குகிறது. அந்த இயந்திரம் டெல்டா பகுதியில் சோதனையும் செய்யப்பட்டுள்ளது. அந்த இயந்திரங்களை விவசாயிகள் வாங்க முடியாது. அதன் விலை அதிகமாக உள்ளது. அதனால் தமிழக அரசு தென்னை மரங்கள் அதிகம் சாய்ந்துள்ள ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு இயந்திரத்தை இலவசமாக அனுப்பினால் விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விழுந்துகிடக்கும் தென்னை மரங்களை அகற்றி மறுபடியும் கன்றுகள் நடவு செய்ய வசதியாக இருக்கும் என்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்