Skip to main content

அரசு மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவர்கள் நூதன போராட்டம்! 

Published on 16/04/2022 | Edited on 16/04/2022

 

Chidambaram Raja Muthiah Government Medical College trainee doctors modern struggle!

 

சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் மருத்து மாணவர்கள் மற்ற அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கும் கல்விக் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என வலியுறுத்திக் கடந்த ஆண்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் விளைவாக 2021 - 2022 ஆண்டிலிருந்து தமிழக அரசு, மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கல்லூரி கட்டணமே வசூலிக்கப்படும் என அரசாணை வெளியிட்டது. மேலும், இந்தக் கல்லூரியைக் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியாகப் பெயர் மாற்றமும் செய்தது. 

 

ஆனால், அரசாணை வெளியிட்ட பிறகும் தனியார் கல்லூரிகளில் வசூலிக்கும் கல்விக் கட்டணம் போன்றே இங்கும் செலுத்தக் கல்லூரி நிர்வாகம் சார்பில் வற்புறுத்தப்பட்டு வரப்படுகிறது. இதுகுறித்து தமிழக அரசிடம் பயிற்சி மருத்துவர்கள் சந்தித்து மற்ற அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிப்பது போல் கல்விக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள்.

 

இந்த நிலையில், பயிற்சி மருத்துவர்கள் கடந்த ஒரு வாரக் காலமாகத் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கண்ணில் கருப்பு துணி கட்டிக்கொண்டும், புத்தகத்தைக் கையில் ஏந்தியும், தூக்குக்கயிறு மாட்டிக்கொண்டும், செல்போன் லைட் அடித்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான  நூதன போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

 

கல்லூரி நேரம் முடிந்து மாலை நேரத்தில் நோயாளிகளுக்கு எந்த இடையூறும் இல்லாமல் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மருத்துவர்களின் வாழ்வைப் பாதுகாக்க வேண்டும் என்றும் உடனடியாகத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கோஷங்களையும் எழுப்பி வருகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்