கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்ச்சத்து குறைபாட்டை தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ் கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும்படி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கோடை காலம் தொடங்கி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் சுற்றுலாத் தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் மலைப் பிரதேசமான உதகை மற்றும் கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர். கடந்த இரண்டு நாட்களாகவே சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், கடந்த ஏப்ரல் கடைசி தேதி முதல் அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் உதகையில் குவிந்துள்ளனர். இதனால் உதகை நகர்ப் பகுதியில் சுற்றுலா வாகனங்கள் அணிவகுத்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, வழக்கு ஒன்றில் வரும் மே 7ஆம் தேதி முதல் உதகை மற்றும் கொடைக்கானல் ஆகிய மலைப்பகுதிகளுக்கு சுற்றுலா செல்பவர்கள் இ-பாஸ் வாங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மே 7ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை இ-பாஸ் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என நீலகிரி, திண்டுக்கல் ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதோடு, இ-பாஸ் முறையை அமல்படுத்த தேவையான தொழில்நுட்பங்களை வழங்க வேண்டும் என அரசுக்கும் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது. இ-பாஸ் உள்ளவர்களுக்கு மட்டுமே சுற்றுலாத்தலங்களில் அனுமதி தர வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இது நீலகிரி மாவட்ட மக்களுக்கும், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் இருக்கும் விவசாயிகளுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில், நீலகிரி மாவட்ட TN 43 என்ற பதிவெண் கொண்ட வாகனங்கள் ஊட்டி செல்வதற்கு இ-பாஸ் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளி மாவட்ட வாகனங்களை நீலகிரி மாவட்டத்துக்கு மாற்றம் செய்திருந்தால் உரிய ஆவணங்களை அளித்து இ-பாஸ் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.