சென்னை மெட்ரோ ரயில் சேவையை கடந்த வாரம் பிரதமர் மோடியும், முதல்வர் எடப்பாடியும் இணைந்து துவக்கி வைத்தனர்.
மெட்ரோ ரயிலில் கட்டணம் மிக அதிகம் என்பதால் பயணிகளின் வரத்து குறைவாகவே இருக்கிறது. இந்த நிலையில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க 'டெய்லி பாஸ்' என்கிற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
ஆனால், இதுகுறித்த விபரங்களை மெட்ரோ நிர்வாகம் விளம்பரப்படுத்தவில்லை. இதனால் மக்களிடம் இந்த திட்டம் சென்று சேரவில்லை.
இந்த புதியத் திட்டத்தின்படி, சென்னை மெட்ரோ ரயிலில், தினமும் 100 ரூபாய் கட்டணத்தில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை எத்தனை முறை வேண்டுமானாலும் பயணிக்கலாம். எந்த மெட்ரோ ரயில் நிலையங்கள் வேண்டுமானாலும் சென்று வரலாம்.
தினசரிக்கான 'டெய்லி பாஸ்' -ஐ மெட்ரோ ரயில் நிலைய டிக்கெட் கவுண்டர்களில் 150 ரூபாய் கொடுத்துப் பெற்றுக்கொள்ளலாம். ஒரு நாள் முழுவதும் இந்த பாஸை பயன்படுத்தி, நாள் முழுவதும் சென்னையை சுற்றிவிட்டு ஏதேனும் ஒரு கவுண்டரில் பாஸை திருப்பி கொடுத்தால் 50 ரூபாயை திருப்பித் தந்துவிடுவார்கள்!
இந்த தினசரி பாஸில் மற்றொரு வசதியும் இருக்கிறது. பேருந்துகளில் பாஸ் எடுத்தால், பாஸை யார் வாங்கினார்களோ அவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். மற்றவர்கள் பயன்படுத்த முடியாது. ஆனால், மெட்ரோ ரயில் பாஸில், பாஸ் எடுத்தவர்கள் மட்டுமல்லாது அவர்களது குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும் பயன்படுத்தலாம். இதற்கான வசதிகள் இந்த தினசரி பாஸில் இருக்கிறது.
பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காகவே இந்த வசதியை செய்து தந்திருக்கிறது சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்!