போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன், சில நேரங்களில் காவல்துறையினரும் கைகோர்த்துச் செயல்படுவதாகக் கேள்விப்படுவது, வருத்தம் அளிக்கிறது எனக் கருத்துத் தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், வேலியே பயிரை மேயலாமா என வேதனையை வெளிப்படுத்தி உள்ளது.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட வேலூர் மாவட்டம் பொம்மிகுப்பத்தைச் சேர்ந்த விஜயகுமாரை, குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, அவரது மனைவி சித்ரா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், போதைப்பொருள் கடத்தலில் வெளிநாட்டவருக்கு தொடர்பு உள்ளதா? போதைப்பொருள் கடத்தலுக்கு வேலையில்லா திண்டாட்டம்தான் காரணமா? மாணவர்களும், இளைஞர்களும் இந்தக் கடத்தலில் ஈடுபடுகிறார்களா? போதைப்பொருள் கடத்தல் மையமாக இந்திய நாடு பயன்படுத்தப்படுகிறதா? என்பன உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி, மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வி.எம் வேலுமணி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க அரசுத் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. அப்போது நீதிபதிகள், போதைப் பொருள் கடத்தல்காரர்களுடன் காவல்துறையினர் கைகோர்த்துச் செயல்படுவதாகக் கேள்விப்படுவது வருத்தமளிப்பதாக உள்ளது. வேலியே பயிரை மேயலாமா? போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் இணைந்து ஓராண்டு பணியாற்றிவிட்டால் போதும், செட்டில் ஆகிவிடலாம் என்று பேசப்படுவதாகத் தெரிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளனர்.