உச்சநீதிமன்ற உத்தரவின்படி, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதத்துக்குள், மருத்துவ மேற்படிப்புக்கான இறுதிகட்ட (3-வது) கவுன்சிலிங்கை நடத்தி முடிக்க வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில், இறுதிக்கட்ட கவுன்சிலிங்கை நடத்தாமல், தனியார் மருத்துவ கல்லூரிகளே, இடங்களை நிரப்பிக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இது சட்டவிரோதம் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் டாக்டர்கள் அரவிந்த், கீதாஞ்சலி ஆகியோர் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்தவெங்கடேஷ், மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையை, தனியார் கல்லூரிகள் இறுதி செய்யக்கூடாது என்று தடை விதித்து உத்தரவிட்டார்.
இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இறுதிக்கட்ட கவுன்சிலிங் நடத்த அனுமதி கோரிய தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை, சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது என்று அரசுத் தரப்பு வக்கீல் கூறினார். இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, மாணவர் சேர்க்கையை இறுதி செய்யக்கூடாது என்ற தடையை நீக்கினார். மேலும், நீட் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் கீதாஞ்சலி கூறும் குற்றச்சாட்டுக்கு, தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் பதில் அளிக்கவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தனியார் கல்லூரிகள், மாணவர்கள் சேர்க்கையில் செய்துள்ள முறைகேடு குறித்து மனுதாரர் தரப்பு வக்கீல் எஸ்.தங்கசிவம் ஆஜராகி வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கையில் முறைகேடு நடந்துள்ளது. எனவே, இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடுகிறேன். உதவி கமிஷனர் பதவிக்கு குறையாத அதிகாரி ஒருவரை விசாரணை அதிகாரியாக சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி., நியமிக்க வேண்டும். அவர் முறைகேடு குறித்து விசாரித்து உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று கூறியுள்ளார்.