அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் உட்கட்சி தேர்தல் நடத்தும் வரை, தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்குத் தடை விதிக்கக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதத்திற்குள் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அ.தி.மு.க., பா.ஜ.க., சி.பி.ஐ.(எம்) போன்ற அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், தங்களின் உட்கட்சி தேர்தல்களை நடத்தி, அதற்குரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்கும் வரை, சட்டமன்றத் தேர்தலை நடத்த தடை விதிக்கக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், ‘சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் நடத்துவது என்பது ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்பாக கருதப்படுவதைப் போல், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், தங்களின் உட்கட்சித் தேர்தல்களை நடத்த வேண்டும் என்பதும் ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்பாக கருதப்பட வேண்டும். குறிப்பாக, கடந்த 2 ஆண்டுகளாக அ.தி.மு.க.வில் உட்கட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. மேலும், உட்கட்சி தேர்தல் நடத்தாததால், பல அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளில் பொறுப்புகள் பெற முடியாமல் நிர்வாகிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்குள், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் உட்கட்சித் தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும்’ என கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.