பஞ்சமி நில ஆக்கிரமிப்பு புகாரில், தேசிய பட்டியலின ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன் அளித்த அறிக்கையை ரத்து செய்யக் கோரிய வழக்கில், ஆக்கிரமித்ததாகக் கூறப்படும் நபர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூரைச் சேர்ந்த அழகுமலை கிராமப்பகுதியில் உள்ள பட்டியலின மக்களுக்குச் சொந்தமான 12 ஏக்கர் பஞ்சமி நிலம் உள்ளிட்ட கிராம நத்தம் மற்றும் கோவில் நிலங்களை, முத்துச்சாமி கவுண்டர் என்ற தொழிலதிபர் ஆக்கிரமித்து, அந்நிலங்களில் கல்யாண மண்டபம், மசாஜ் மையங்கள் அமைத்ததுடன், தீண்டாமை இரும்புத் தடுப்பு வேலிகள் அமைத்ததாக, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பு காவல்துறையினரிடம் 2018-ல் புகார் அளித்தது.
இதுதொடர்பாக, அந்த கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் தொடர்ந்த வழக்கில், காவல்துறையிடம் அளித்த புகாரில் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், தேசிய பட்டியலின ஆணையத்திடம் கடந்த 2018- ஆம் ஆண்டு புகார் அளிக்கப்பட்டதாகவும், துணைத் தலைவர் முருகன் கிராமத்திற்கு நேரில் வந்து, பட்டியலின மக்கள், அருந்ததிய மக்கள் மற்றும் மற்ற சமூக மக்களிடம் தனித்தனியாக கடந்த 2019- ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ரகசிய விசாரணை நடத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், விசாரணை தொடர்பான விவரங்களை, பட்டியலின மக்களுக்குத் தெரியப்படுத்தாமல், கோவிலைப் பாதுகாக்கவே தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டதாக, ஊடகங்களுக்கு முருகன் பேட்டியளித்ததாக மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.
இவ்வாறு பஞ்சமி நில பாதுகாப்பு விவகாரத்தில் அரசியல் சாசனத்திற்கு விரோதமான பரிந்துரைகளை முருகன் வழங்கி இருப்பதாகவும், அதை ரத்து செய்து பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியலின மக்களிடம் ஒப்படைக்க உத்தரவிடக் கோரியும் மனுவில் கோரிக்க வைத்திருந்தார்.
இந்த வழக்கு கடந்த ஜூலை மாதம் விசாரணைக்கு வந்தபோது, தேசிய பட்டியலின ஆணையமும் அதன் துணைத் தலைவர் முருகனும் பதிலளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இன்று (12/03/2020) இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஆக்கிரமித்ததாகக் கூறப்படும் தொழிலதிபர் முத்துசாமி தரப்பில் பதிலளிக்க கால அவகாசம் கேட்கப்பட்டதால் வழக்கு 2 வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.