
ஆளும் கட்சியினரும் அவதூறாகப் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சபாநாயகர் மற்றும் தமிழக அரசை விமர்சித்ததாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. தனக்கெதிரான இந்த அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டாலின் வழக்கு தொடர்ந்திருந்தார்.
நீதிபதி சதீஷ்குமார் முன்பு இவ்வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது, லட்சக்கணக்கான தொண்டர்களின் மதிப்பைப் பெற்றுள்ள எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சர் குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளைக் கூறுவதைத் தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்து, அவதூறு வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில், கனிமொழி எம்.பி.க்கு எதிராகத் தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கு, நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், பொதுமக்கள் வரிப்பணத்தில் நடைபெறும் அரசு விழாக்களில், எதிர்க்கட்சிகளுக்கு எதிராக ஆளுங்கட்சியினர் அவதூறாகப் பேசி வருவதாகச் சுட்டிக்காட்டினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி,‘நான் சொன்ன கருத்துகள் இரண்டு கட்சிகளுக்கும் பொருந்தும். ஆளுங்கட்சியினர், அவதூறாக எதிர்க்கட்சிகள் குறித்துப் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.’ என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, வழக்கு தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்வதற்காக, வழக்கு விசாரணையை ஜனவரி 7- ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.