![chennai high court chief justice ap sahi speech](http://image.nakkheeran.in/cdn/farfuture/ce3yc0p2Vn8sWAhaXp4D5LKsGnBQfGzgnKuq2uvgyLM/1608776438/sites/default/files/inline-images/sahi32222.jpg)
பல்வேறு துறைகளின் ஆராய்ச்சிகளுக்கு நோபல் பரிசு வழங்கப்படும்போது, சட்டத்திற்கு ஏன் வழங்கப்படவில்லை என்பதை நாம் யோசிக்க வேண்டுமென, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி குறிப்பிட்டார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ பி சாஹி பணி ஓய்வு பெற்றார். அவருக்கு உயர்நீதிமன்றம் சார்பில் பிரிவு உபச்சார விழா நடத்தப்பட்டது. காணொலிக் காட்சி மூலம் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில், உயர்நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், தலைமை நீதிபதியைப் பாராட்டி பேசிய அரசுத் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண்,‘தலைமை நீதிபதி சாஹியின் ஓய்வு, சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மட்டுமல்லாமல், நீதித்துறைக்கே பெரிய இழப்பாகும்.தலைமை நீதிபதியின் சிறந்த நிர்வாகத் திறனால் கரோனா காலத்தில் சென்னை உயர்நீதிமன்றம் அதிக வழக்குகளை முடித்து வைத்துள்ளது.’ எனக் குறிப்பிட்டார்.
பின்னர் ஏற்புரையாற்றிய தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, “முழு திருப்தியுடன் பணி ஓய்வு பெறுகிறேன். அதற்கு உதவியாக இருந்த சக நீதிபதிகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும், நீதிமன்ற அதிகாரிகளுக்கும் நன்றி. பல்வேறு துறைகளின் ஆராய்ச்சிகளுக்கு நோபல் பரிசு வழங்கப்படும்போது, சட்டத்திற்கு ஏன் வழங்கப்படவில்லை என்பதை நாம் யோசிக்க வேண்டும்? அதற்கான முன்னெடுப்பு இருந்தால் கைகோர்க்கத் தயாராக இருக்கிறேன். கரோனாவின்போது சிகிச்சை அளித்த சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துமனை சார்ந்த அனைவருக்கும் நன்றி.” என நா தழுதழுக்க ஏற்புரையை நிறைவு செய்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமானி ராஜினாமா செய்ததை அடுத்து, பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஏ.பி.சாஹி, கடந்த 2019- ஆம் ஆண்டு நவம்பர் 11- ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் 49- வது தலைமை நீதிபதியாகவும், சுதந்திர இந்தியாவில், சென்னை உயர்நீதிமன்றத்தின் 30- வது தலைமை நீதிபதியாகவும் பணியாற்றிய அவர், மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டது, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ்களை ரத்து செய்து, மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது உள்ளிட்ட முக்கிய தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.