புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத்தருவது அரசின் கொள்கை. இதை நிறைவேற்றும் கடமை அரசுக்கு உள்ளது. காங்கிரஸ்- தி.மு.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் டில்லியில் மாநில அந்தஸ்து கேட்டு தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது. பிரதமரிடம் மனு கொடுக்கப்பட்டது. இந்நிலையில், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தரும் மசோதாவை பாராளுமன்றத்தில் கொண்டுவர வேண்டும் என தற்போது பிரதமரிடம் மீண்டும் வலியுறுத்தியுள்ளேன். 15-ஆவது நிதி கமிஷனில் புதுச்சேரியை சேர்க்க கோரிக்கை விடுத்தேன். அவ்வாறு செய்தால் நமக்கு முறையான மானியம் கிடைக்கும்.
மத்திய அரசின் நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு, அங்கன்வாடி உணவு, சர்வ சிக்க்ஷா அபியான் உள்ளிட்ட திட்டங்களில் 60 சதவீதம்தான் மானியம் தரப்படுகிறது. 90 சதவீதம் தரவேண்டும் என்றும் பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.
கவர்னருக்கு அதிகாரம் தொடர்பாக லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் தன்னிச்சையாக அதிகாரமில்லை என்று தீர்ப்பு வழங்கியது. கவர்னர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தடை கேட்டு மேல்முறையீடு செய்தும், தடை விதிக்க மறுக்கப்பட்டது. மேலும் கடந்த 7-ஆம் தேதி அமைச்சரவையில் நிலம், நிதி தொடர்பாக எடுக்கப்படும் முடிவுகளை அமல்படுத்தவும் தடை விதித்து இருந்தது. இந்த வழக்கு விசாரணை கடந்த 20-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கவர்னர் தரப்பில், மஞ்சள் கார்டுகளுக்கு இலவச அரிசி வழங்க கூடாது என்று வாதிடப்பட்டது. அதற்கு லட்சுமிநாராயணனின் வழக்கறிஞர், ‘அமைச்சரவை முடிவில் கோர்ட் தலையிட அதிகாரமில்லை’ என்று தெரிவித்தார். அதையடுத்து வழக்கு விசாரணையை ஜூலை 10-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. ஐகோர்ட் உத்தரவுக்கு தடை ஏதும் விதிக்கப்படாத நிலையில், ஐகோர்ட் தீர்ப்பையே கடைபிடிக்க வேண்டும். வழக்கு நிலுவையில் இருப்பதால் பட்ஜெட் தாக்கல் செய்வது தடைபடாது.
டில்லியில் கடந்த 15ம் தேதி நடந்த நிதி ஆயோக் முதல்வர்கள் மாநாட்டில், நீர் சேமிப்பு முக்கிய கருத்தாக ஆலோசிக்கப்பட்டது. ஏரி, குளம் துார் வாருதல், வீடுகளில் மழை நீர் சேகரிப்பு, பாதுகாக்கப் பட்ட குடிநீர் பொதுமக்களுக்கு வழங்குதல், நீர் வீணாவதை தடுத்தல் குறித்து விவாதிக்கப் பட்டது. நீர் நிலைகளை பாதுகாப்பது மட்டுமின்றி, ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநில அரசு நடவடிக்கை எடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. மத்திய அரசு முக்கிய நீர் கொள்கையை அறிவித்துள்ளது. பிரதமர் விவசாயத்திற்கு நீர் சேமிப்பு என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளார். அதன்படி பல நீர் நிலைகளில் மத்திய, மாநில அரசு இணைந்து துார்வார நிதி ஆதாரத்தையும் கொடுத்துள்ளனர்.புதுச்சேரியில் கடந்த ஆண்டு 16 ஏரிகள் துார்வார நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஏரி சங்கங்கள் எங்களுக்குத்தான் துார் வாரும் பணியை வழங்க வேண்டும் என கவர்னரிடம் முறையிட்டனர். அரசு டெண்டர் மூலம் குறைந்த தொகைக்கு துார் வார முன்வருபவர்களிடம் கொடுக்க கூறியதை கவர்னர் ஏற்கவில்லை. இது தொடர்பாக அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டதை எதிர்த்து ஏரி சங்கங்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.அந்த வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்து, குறைந்த தொகைக்கு ஏரிகளை துார்வாரும் அமைச்சரவை முடிவை இறுதி செய்தது. அரசு முடிவின்படி செயல்பட்டிருந்தால் ஓராண்டிற்கு முன்பே ஏரிகள் துார்வாரப்பட்டிருக்கும். பருவ மழை இல்லாததாலும், காவிரி நீர் கிடைக்காததாலும், புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்களில் வறட்சி ஏற்பட்டுள்ளது. நீரை சேமிப்பது அத்தியாவசிய கடமை. புதுச்சேரி மக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். வாழ்வாதாரம் நீரில் உள்ளது. பூமிக்கடியில் இருக்கும் நீரை அதிகளவு உறிஞ்சினால் எதிர்கால சந்ததி பெருமளவு பாதிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.