
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவும், கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு முடிந்து தேர்தல் பிரச்சாரம், பரப்புரை உள்ளிட்ட பணிகளில் அரசியல் கட்சிகள் பிஸியாக இயங்கிவருவதால், தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தற்போது கோவையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் அறிக்கை மற்றும் அதன் முக்கிய அம்சங்களை ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். அதில், மருத்துவ படிப்புகளுக்கு தமிழ்நாடு பாடத்திட்டத்தில் இருந்து SEET (சீட்) தேர்வு நடத்தப்படும். மேடு, பள்ளம் இல்லாத மேம்படுத்தப்பட்ட சமூகநீதி வழங்கப்படும். அனைவரையும் உள்ளடக்கிய, வேறுபாடுகள் களைந்த அரசியல்நீதி வழங்கப்படும். படிப்படியாக மதுக்கடைகள் மூடப்பட்டு முழு மதுவிலக்கை கொண்டுவருவதே இலக்கு. ஓராண்டில் ஆங்கில மொழி புலமை, மற்ற மொழி பயில, தேர்வு எழுத வசதி வாய்ப்பு ஏற்படுத்தித் தர வழிவகை செய்யப்படும் என அறிக்கையின் சாராம்சங்களைக் கூறியிருந்தார்.
தற்போது அறிக்கை வெளியிடும் நிகழ்வில் அவர் அறிவித்த திட்டங்கள்: ராணுவ கேண்டீன் போல நியாமான விலையில் 'மக்கள் கேண்டீன்' திட்டம் அறிமுகப்படுத்தப்படும். தற்சார்பு கிராமங்களை உருவாக்கும் கலாமின் ‘புறா திட்டம்’ 234 தொகுதிகளிலும் உருவாக்கப்படும். இல்லத்தரசிகளுக்குத் திறன் மேம்பாட்டு பயிற்சியளித்து, அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும். நுழைவுத் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று மட்டுமே சட்டத்தில் உள்ளது. அதனை மாநில அளவில் நடத்துவோம் என திட்டங்களை அறிவித்தார்.
மேலும் இந்நிகழ்வில் பேசிய கமல், குடும்பத் தலைவிகளுக்கு 1,000 1,500 ரூபாய் என எதை அடிப்படையாக நிர்ணயம் செய்கிறார்கள் என திமுக, அதிமுக கட்சிகளிடம் கேள்வி எழுப்பினார்.