சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் உள்ள அம்மா உணவகங்களில் 12 நாட்களுக்கு உணவு இலவசம் என்று தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்பு, ஏழை எளிய மக்களின் நலன் கருதி, அம்மா உணவகங்களில் வழங்கப்படும் உணவு விலையில்லாமல் 31-05-2020 வரை வழங்கப்பட்டு வந்தது. தற்போது சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளிலும் தீவிர ஊரடங்கு இன்று (18/06/2020) நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட உள்ள நிலையில், இப்பகுதிகளில் செயல்படும் அனைத்து அம்மா உணவகங்களிலும் விலையில்லாமல் உணவு வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
மேலும் முதியோர், நோயுற்றோர் மற்றும் ஆதரவற்றோர்களின் நலன் கருதி, தற்போது இயங்கி வரும் சமுதாய உணவு கூடங்கள் மூலம் உணவு தயாரிக்கப்பட்டு அவர்களின் இல்லங்களுக்கு சென்று விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது.
ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ள இந்நிலையில், இப்பகுதிகளில் உள்ள சமுதாய சமையல் கூடங்களில் மேலும் வலுப்படுத்தி, போதுமான அளவு உணவு சமையல் செய்து, இந்த உணவை விலையில்லாமல், தேவைப்படும் முதியோர், நோயுற்றோர் மற்றும் ஆதரவற்றோர்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கவும் ஆணையிட்டுள்ளேன் இந்த நடைமுறை நாளை (19-06-2020) முதல் (30-06-2020) வரை செயல்பாட்டில் இருக்கும். இவ்வாறு முதல்வர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.