தமிழ்நாட்டில் பொறியியல் கலந்தாய்வு ஏற்கனவே அறிவித்ததை விட ஒரு மாதத்திற்கு முன் தொடங்க இருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “2/08/2023ல் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்த அந்த கவுன்சிலிங் 2/07/2023ல் இருந்து துவங்கப்படுகிறது. அதில் சிறப்பு இட ஒதுக்கீடு 2 ஆம் தேதியில் இருந்து 5 ஆம் தேதி வரையிலும் பொது கலந்தாய்வு 7/7/2023 ஆம் தேதியில் இருந்து 24/08/2023 வரையிலும் நடைபெறும். துணைக் கலந்தாய்வு 26/8/2023ல் இருந்து 29/08/23 வரை நடைபெறும்.
எஸ்.சி.ஏ, எஸ்.சி. கவுன்சிலிங் 1/09/2023ல் இருந்து 2/9/2023 ஆம் தேதி வரை நடைபெறும். இவை அனைத்தும் முடிந்த பின் முதலாமாண்டு பொறியியல் படிப்பு 3/09/2023 அன்று துவங்கப்படும்” என்றார். முன்னதாக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்து பேசிய அமைச்சர் பொன்முடி, இக்கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மேலும் 3 தினங்கள் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரிகளில் நடப்பாண்டு முதல் ஆண்டுக்கு ரூ.200 நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்பட இருக்கிறது. பாலிடெக்னிக் பட்டயப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு நாளை முதல் தொடங்க இருக்கிறது” என்றார்.