சென்னையில் கடந்த சில மாதங்களாக பல்வேறு பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இருசக்கர வாகனத்தில் வரும் இளைஞர்கள், சாலையில் நடந்து செல்பவர்களின் அருகில் சென்று அவர்களின் கழுத்தில் கிடக்கும் நகைகளை பிடுங்கிச் செல்வதும், முகவரி கேட்பது போல் பேசிக்கொண்டு இருக்கும் போதே, அவர்களின் உடைமைகளை பறித்து செல்வது என ஒவ்வொரு நாளும் நூதன முறையில் திருட்டு சம்பவங்கள் சென்னை முழுவதும் நடைபெற்று வருகிறது. காவல்துறையினர் இரவு நேரத்தில் ரோந்து சென்றாலும், இந்த திருட்டு சம்பவங்களை குறைக்க முடியவில்லை. குறிப்பாக தற்போது யாரும் வீடு புகுந்து பொருட்களை களவாடிச் செல்வது இல்லை என்பதாலும், ஆள் அரவமற்ற இடங்களில் சிக்குபவர்களிடம் மட்டுமே இந்த திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதால் குற்றவாளிகளை அடையாளம் கண்டறிவதில் பெரிய சிக்கல் இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. சிசிடிவி காட்சிகள் இருக்கும் பட்சத்தில் திருடர்களை அடையாளம் காண்பது எளிதாக இருக்கும் என்றும் போஸிசார் கூறுகிறார்கள்.
இந்நிலையில், செயின் பறிப்பில் ஈடுபட்ட 5 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காவல்துறையினர் பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கியவர்களை தினமும் கைது செய்து வருகின்றார்கள். கைது செய்யப்படும் அவர்கள், அடுத்தநாள் கழிவறையில் வழுக்கி விழுந்து கையில் கட்டுப்போட்டிருப்பது போன்ற புகைப்படங்கள் தொடர்ச்சியாக வெளிவரும். அரசு அலுவலகத்தில் உள்ள கழிவறையில் புதிதாக செல்லும் போது அதற்கான வாய்ப்பு இருக்கலாமோ? என்றுதான் இதுவரை பெரும்பாலானவர்கள் நினைத்திருக்கலாம். அது உண்மை இல்லை என்றாலும், நம்புவதற்காவது ஒரு வாய்ப்பு இருந்தது. ஆனால், நேற்று கைது செய்யப்பட்ட 5 இளைஞர்களும் கை, கால் முறிந்த நிலையில் இன்று மருத்துவமனையில் கட்டுப் போட்டுள்ளனர். பாத்ரூம் செல்லும் போது வழக்கி விழுந்துவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஒரே நேரத்தில் ஐந்து பேரும் போனால் கூட, ஒருத்தராவது தப்பித்து இருக்கலாமே? எப்படி அனைவருக்கும் கை முறிந்தது என்று சிரித்துக்கொண்டே கேள்வி எழுப்பிகின்றனர் இணையவாசிகள்.