Skip to main content

தவறுகளை ஒப்புக்கொண்டாரா சிஇஓ?. - முடிவுக்கு வருகிறதா ஆசிரியர்கள் போராட்டம்?

Published on 11/08/2018 | Edited on 11/08/2018


திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமாரை கண்டித்து 18 ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு தொடர்ச்சியாக போராட்டம் நடத்திவருகிறது. இந்த போராட்டத்தை கண்ட கல்வித்துறை உயர் அதிகாரிகள் விசாரணை குழுவை அமைத்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணை தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட தொடக்க/நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு செய்திக் குறிப்பை தங்களது சக ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ளது. அதில்,

திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் சர்வதிகாரப் போக்கு மற்றும் நிதி மோசடி, ஆசிரிய சங்கங்களின் பொறுப்பாளர்களை பழிவாங்கும் விதமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசியர்களை அதே பள்ளியில் மீண்டும் பணியமர்த்தக் கோரி திருவண்ணாமலை மாவட்ட தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக 11.07.2018 புதன் அன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் மாலை 5.00 மணிக்கு 6000 பேர் பங்கேற்ற மாலை நேர மாபெரும் ஆர்ப்பாட்டமும், 29.07.2018 ஞாயிறு அன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் 4000 பேர் பங்கேற்ற மாபெரும் உண்ணாவிரதப் உண்ணாவிதப் போராட்டமும் நடத்தப்பட்டது.

அனைத்து சங்கங்களின் மாநிலப் தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் 26.07.2018, வியாழக்கிழமை அன்று இயக்குநர், தொடக்கப்பள்ளி இயக்குநர் மற்றும் முதன்மைச் செயலாளர் உயர்திரு.பிரதீப் யாதவ் இ.ஆ.ப அவர்களுடன் நடத்திய பேச்சு வார்த்தையின் தொடர்ச்சியாக இணை இயக்குநர் திரு.குப்புசாமி அவர்கள் திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் துறை ரீதியான விசாரணை நடத்தி அறிக்கை அளித்தார். அதன்பிறகு கடந்த திங்கட்கிழமை (06.08.2018) அன்று திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் மீது துறை ரீதியான விசாரணையை பள்ளிக் கல்வித் துறை செயலாளர் உயர்திரு.பிரதீப் யாதவ் இ.ஆ.ப அவர்கள் நடத்தியதன் விளைவாக ஒன்பது குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன.

அவைகளை சரி செய்யும் வேலைகளும் தொடங்கியுள்ளன.

1) திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலைப் பிள்ளை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நான்கு மாதங்களாக பல பள்ளிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட 48 ஆசிரியரில்லா பணியாளர்கள் (Non teaching staffs) அரசின் ஊதியத்தை வீணடித்து அவர்கள் பணி ஏதும் செய்யாமல் ஒரே அறையில் தங்க வைத்து 06.08.2018 திங்கள் கிழமை அன்று மாலை 5.30 மணிக்கு அவர்கள் பணிபுரியும் பள்ளிகளுக்கே பல மாதங்களுக்கு பிறகு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

2) 11.07.2018 ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் அலுவலகத்திற்கு சம்மந்தமில்லாத வெளியாட்கள் பலர் அலுவலக நேரத்தில் இருப்பதில்லை.

3) 11.07.2018 அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு தான் MY CHILD MY CARE என்ற முறையில்லா திட்டத்திற்கு 21 பேர் கொண்ட அறக்கட்டளை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் 27.07.2018 அன்று வழங்கப்பட்ட பணத்திற்கு மட்டும் இரசீது வழங்கப்பட்டுள்ளது.

4) திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் எடை போட்டு விற்றது போக எஞ்சிய 30% தொடக்கக் கல்வித் துறை விடைத் தாள்களை சம்மந்தப்பட்ட தொடக்க நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் திரும்பப் பெற்றுக் கொள்ள Mail அனுப்பியுள்ளது.

5) பள்ளிக் கல்வித் துறையில் பணி நிரவலில் தான் செய்த தவறுகள் அனைத்தையும் ஒப்புக் கொண்டு பணி நிரவல் செய்யப்பட்டு அதே பள்ளிக்கு மாற்றுப் பணி வழங்கப்பட்ட இருபது ஆசிரியர்களின் மாற்றுப் பணி ஆணைகளை இன்று (09.08.2018) திரும்பப் பெற்றது. மேலும் இன்று (10.08.2018) காலை இதுவரை மாற்றுப்பணி வழங்கப்பட்ட சுமார் இருநூறு ஆசிரியர்களின் மாற்றுப்பணி ஆணை இரத்து செய்யப்பட்டு அவரவர் சம்பளம் பெறும் பள்ளிக்கே அனுப்பப்பட்டு உள்ளனர்.

6) தமிழகத்திலேயே திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மட்டுமே நியமித்த ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் ஐந்து Subject களுக்கும் போடப்பட்ட தலா சிறப்பு அமைப்பாளர்களை EDC 25 பேர் இன்று (09.08.2018) திரும்ப அவரவர் பள்ளியில் சென்று பணியில் சேரச் சொன்னது.

7) திருவண்ணாமலை மாவட்டம். ஒன்றிய அளவில் கலைத் திருவிழா நடத்த அனுமதிக்கப்பட்ட தொகை ரூபாய் 32 ஆயிரம் இதுநாள் வரை வழங்கப்படாமல் இருந்தது, நேற்று முன்தினம் (08.08.2018) அன்று காசோலை மூலமாக அந்தந்த வட்டார கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் மாதத்தில் வழங்கப்பட வேண்டியது ஆகஸ்ட் மாதம் ஒன்பதாம் தேதி வழங்கப்பட்டுள்ளது. இதற்குண்டான காலதாமதம் மற்றும் இத்தொகை இதுநாள் வரை எந்த வங்கிக் கணக்கில் பராமரிக்கப்பட்டது என்ற விவரங்கள் தெரியவில்லை விரைவில் வெளிவரும்.

8) தொடக்கக் கல்வித் துறையில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் காலியாக இருந்த பணியிடங்களுக்கு நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ரூபாய் 3000 வீதம் மூன்று மாதங்களுக்கு உண்டான தொகையை உடனடியாக வந்து பெற்றுக் கொள்ளுமாறு வட்டார கல்வி அலுவலருக்கு தகவல் வந்துள்ளது.

9) MY CHILD MY CARE திட்டத்தில் திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் அவர்கள் ஆசிரியப் பெருமக்களிடம் தான் மிரட்டி பணம் வாங்கியதை பகிரங்கமாக ஒப்புக் கொண்டு இதுவரை இந்த திட்டத்திற்கு நிதி அளித்த அனைவரையும் திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு ஆசிரியப் பெருமக்களுக்கும் மற்றும் ஆசிரியரில்லா பணியாளர்கள் ( Non teaching staff) அனைவருக்கும் mail அனுப்பி உள்ளார். இவை அனைத்தும் தனிப்பட்ட ஒருவரின் வெற்றி அல்ல. நம் திருவண்ணாமலை மாவட்டத்தில் பணிபுரியும் 12000 ஆசிரியர்களின் வெற்றி ஆகும்.

இவ்வளவு ஊழல்களை செய்த திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமாரை எதிர்த்து நெஞ்சை நிமிர்த்தி போராட்டங்கள் நடத்தியது தவறு என ஒரு சில பொய்யான சங்கங்கள் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்பாடுகள் சரி என தம்பட்டம் அடித்த கோஷ்டிகள் மேற்காணும் ஊழல்கள் யாவும் உண்மை என இப்போதாவது ஒப்புக்கொள்வார்களா? சிந்தியுங்கள் ஆசிரியப் பெருமக்களே... அடுத்த கட்ட போராட்டத்திற்கு தயாராவோம்.

மை செல்டு என்கிற திட்டத்துக்கு விருப்பமில்லாமல் பணம் தந்த ஆசிரியர்கள் தங்களது பணத்தை திருப்பி பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் ஆசிரியர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்