Skip to main content

பச்சலூர் அரசுப் பள்ளிக்கு ‘வெரி குட்’ சான்று கொடுத்த மத்திய அரசு; குவியும் பாராட்டுகள்!

Published on 14/07/2023 | Edited on 14/07/2023

 

Central Govt awarded "Very Good" certificate Pachalur Government School

 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் பச்சலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தமிழ்நாடு அரசு விரும்பும் தலைசிறந்த பள்ளியாக உள்ளது. கடந்த ஆண்டு டெல்லி சென்ற முதலமைச்சர் அங்குள்ள அரசுப் பள்ளிகளை ஆய்வு செய்து அதேபோலத் தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளைத் தரம் உயர்த்த வேண்டும் என்று சொன்னபோது, பச்சலூர் பள்ளி மாணவர்கள் "முதல்வரய்யா... ஒருமுறை எங்கள் பள்ளிக்கு வந்து பாருங்கள்" என்று நக்கீரன் மூலம் வீடியோவில் அழைப்பு கொடுத்திருந்தனர். விரைவில் முதலமைச்சர் வருவார் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.

 

இந்தப் பள்ளி மாணவ, மாணவிகள் மதிய உணவு எடுத்துக் கொள்ளும் அழகே தனி. தனக்கு வேண்டிய உணவைத் தானே எடுத்துக் கொண்டு சுத்தமான டைல்ஸ் தரையில் அமர்ந்து ஒரு சோறு கீழே சிந்தாமல் சாப்பிட்டு வரிசையாகச் சென்று தட்டுகளைக் கழுவி அடுக்கி வைக்கும் அழகு மேலும் சிறப்பு. இதனைக் கண்காணிக்க சில மாணவர்கள் நிற்பதும் சிறப்பு. அத்தனையும் நக்கீரன் வீடியோவில் பதிவு செய்திருந்தோம்.

 

Central Govt awarded "Very Good" certificate Pachalur Government School

 

இந்த நிலையில் தான் உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் ஒரு ஆய்வுக் குழுவினர் பச்சலூர் அரசுப்பள்ளி உள்படப் பல அரசுப் பள்ளிகளில் மதிய உணவு தயாரிக்கும் கூடம் முதல் மதிய உணவு வழங்கல் தரம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து தரமான, சுத்தமான, சுகாதாரமான சூழலில் மதிய உணவு வழங்கும் அரசுப் பள்ளிக்கான "வெரி குட்" என்ற சான்றிதழை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதனால் பள்ளிக்கு மேலும் ஒரு நட்சத்திரம் கிடைத்திருப்பது போல மாணவர்கள் மகிழ்ச்சியில் கொண்டாடுகின்றனர்.

 

Central Govt awarded Very Good certificate Pachalur Government School

 

எந்த அடிப்படையில் இந்தத் தேர்வு செய்யப்பட்டது என்பது குறித்து உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “இந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் பல அரசுப் பள்ளிகளைத் தேர்வு செய்து மதிய உணவு தயாரிப்பு முதல் உணவு வழங்கும் வரை ஆய்வுக்குழு முழுமையாக இருந்து ஆய்வு செய்தது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பச்சலூர் பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது” என்றனர். மேலும், உணவு தயாரிக்கும் கூடம் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் உள்ளது. மதிய உணவு தயாரான பிறகு அதன் தரம் ஆய்வு செய்யப்பட்டது. பிறகு அப்பள்ளி மாணவ, மாணவிகள் முதல் வகுப்பிலிருந்து 8 ஆம் வகுப்பு வரை உள்ள அனைவருமே வரிசையாகத் தட்டுகளைக் கழுவிக் கொண்டுவந்து தங்களுக்குத் தேவையான அளவு சாப்பாட்டைத் தாங்களே எடுத்துக் கொண்டு உணவை வீணாக்காமல் முழுமையாகச் சாப்பிடுகிறார்கள். எல்லாவற்றையும் விட உணவு உண்ணும் அறை முழுமையாகச் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் உள்ளது. அங்கு வரிசையாக அமர்ந்து ஒரு சோறு கூட சிதறாமல் சாப்பிட்டு அழகாக எழுந்து போகிறார்கள். இதையெல்லாம் ஆய்வு செய்து மதிப்பெண் வழங்கப்பட்டதில் அதிக மதிப்பெண் பெற்ற பச்சலூர் பள்ளி தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது” என்றனர். 

 

Central Govt awarded "Very Good" certificate Pachalur Government School

 

இது எம் பள்ளி பெற்றோர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், எஸ்எம்சி, மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், அமைப்பாளர், சமையலர்கள் மற்றும் இவற்றையெல்லாம் செய்ய பல்வேறு வகையிலும் உதவியாக இருந்த நல்ல உள்ளங்கள், அதிகாரிகளுக்குச் சேர வேண்டிய பெருமை என்கிறார் பள்ளித் தலைமை ஆசிரியர் ஜோதிமணி. இதுபோன்ற பள்ளிகளை முன்மாதிரியாகக் கொண்டால் கொடையாளர்களின் பங்களிப்போடு அனைத்து அரசுப் பள்ளிகளையும் தரமான பள்ளிகளாக மாற்றிக் காட்டலாம் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சங்கம்விடுதி குடிநீர் தொட்டி விவகாரம்! அதிகாரிகள் ஆய்வு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sangamviduthi drinking water tank issue officials investigation

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சங்கம்விடுதி ஊராட்சியில் உள்ள குருவாண்டான் தெருவில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அதே பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கும் இந்த தண்ணீரே வழங்கப்படுகிறது. ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமுதாய மக்களுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது. பாகுபாடற்ற ஒற்றுமையான கிராமமாக உள்ளது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு காலையில் குழாயில் தண்ணீர் தூசியாக வந்துள்ளதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் தண்ணீர் தொட்டியில் ஏறிப் பார்த்துவிட்டு தண்ணீரை வெளியேற்றி பார்த்துள்ளனர். உள்ளே பாசி போல கருப்பாக ஆங்காங்கே கிடந்துள்ளது. அவற்றை சேகரித்து வெளியே எடுத்து பார்த்த போது கூடியிருந்தவர்கள் ஒவ்வொருவரும் மாட்டுச் சாணம் என்றும், தொட்டி சரியாக கழுவாததால் சேர்ந்துள்ள பாசி என்றும் கூறினர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

இந்த தகவல் அறிந்து வருவாய்த் துறை, ஊரகவளர்ச்சித்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து விசாரனை செய்தனர். தொடர்ந்து தண்ணீரையும், தண்ணீர் தொட்டியில்இருந்து சேகரிக்கப்பட்ட கழிவுகளையும் ஆய்வுக்காக எடுத்துச் சென்றதுடன் தற்காலிகமாக சம்மந்தப்பட்ட தண்ணீர் தொட்டியில் இருந்து குடிநீர் கொடுப்பதை நிறுத்திவிட்டு டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்தனர். சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அறந்தாங்கி டிடி நமச்சிவாயம் தலைமையில் கடந்த 2 நாட்களாக அந்த ஊரில் மருத்துவ முகாம் நடந்து வருகிறது. மேலும் அதே பகுதியில் உள்ள காவிரி குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் வழங்க அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள சிலர் கூறும் போது, தண்ணீர் தொட்டி சரிவர சுத்தம் செய்யாததால் தேங்கிய பாசி கரைந்து குழாய்களில் வந்திருக்கலாம். மேலும் இந்த ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமூதாயத்தவர்களுக்கும் தண்ணீர் போவதால் வேறு கழிவுகளை கலந்திருக்க அச்சப்படுவார்கள். ஆய்வு முடிவுகள் வந்த பிறகே உண்மை நிலை தெரியும். அதற்குள் யாரும் சமுதாய ரீதியாக அணுக வேண்டாம் என்கின்றனர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்த டிடி நமச்சிவாயம்.. கழிவு இருந்ததாக மக்கள் சொன்னார்கள் கழிவுகள், தண்ணீர் ஆய்விற்கு போய் உள்ளது. ஏதேனும் கலந்த தண்ணீரை குடித்திருந்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு வந்திருக்கும். இதுவரை இந்த கிராமத்தில் அப்படி எந்த பாதிப்பும் இல்லை. மேலும் தண்ணீர் தொட்டியில் மீண்டும் சுத்தம் செய்து தண்ணீர் ஏற்றி குளோரின் செய்யப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்யும் போது கலப்படம் இருந்தால் தெரியும். இரண்டு நாள் மருத்துவ முகாமில் நேற்று 40 பேரும் இன்று 12 பேருமே வந்துள்ளனர். அவர்களும் சாதாரணமாக வந்தவர்கள் தான். தொடர்ந்து ஆய்வுகள் நடக்கிறது என்றார். இந்த நிலையில் போலீசார் வஜ்ரா வாகனத்துடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

தமிழ்நாடு கேட்டது... மத்திய அரசு கொடுத்தது - நிவாரண நிதி ஒதுக்கீடு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Central government relief fund allocation to tamilnadu

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு இதுவரை நிதி வழங்காமல் இருந்தது.

இதற்கிடையில், வெள்ள பாதிப்புகளுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.2 ஆயிரம் கோடி வழங்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் கடந்த 3ஆம் தேதி தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தமிழகம் சந்தித்து வரும் இயற்கை பேரிடர்கள் பற்றியும் அதன் விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் பெயரில், தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் குமணன் இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரண நிதியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.