![Argument that ended in incident, relatives who escaped](http://image.nakkheeran.in/cdn/farfuture/HSdAm-RDj-hLX1CKs-OTcii8FFa3NTHCQHuPTFAk_ak/1636697760/sites/default/files/inline-images/died-1_36.jpg)
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ளது கிளாப்பாக்கம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ராமன், சீனிவாசன், சிவக்கொழுந்து ஆகிய மூன்று சகோதரர்களுக்கு இடையே தங்கள் மூதாதையர்கள் சம்பாதித்து வைத்த சொத்துக்களைப் பாகம் பிரிப்பது சம்பந்தமாக சில ஆண்டுகளாகவே தகராறு நடந்துவந்துள்ளது. இது தொடர்பாக அண்ணன் தம்பிகளுக்குள் அடிக்கடி சண்டை, பிரச்சனை, சச்சரவு என தொடர்ந்து நடந்துவந்துள்ளது. இந்த நிலையில், நேற்று (11.11.2021) மாலை சீனிவாசன், சிவக்கொழுந்து ஆகிய இருவருக்கும் இடையே சொத்துத் தகராறு பிரச்சனை மீண்டும் எழுந்துள்ளது.
அப்போது வாய்த் தகராறில் ஈடுபட்டிருந்தனர். இதில் ஆத்திரமடைந்த சீனிவாசனும் அவரது உறவினர்களும் சேர்ந்து மரக்கட்டையை எடுத்து சிவக்கொழுந்தை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த சிவக்கொழுந்து, சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். இதைப் பார்த்த அவரது அண்ணன் சீனிவாசன் மற்றும் அவரது உறவினர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அக்கம் பக்கம் இருந்தவர்கள் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சிவக்கொழுந்துவை மீட்டு சிகிச்சைக்காக சிறுவாடி கிராம ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு மரக்காணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிவக்கொழுந்தை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்துபோனதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மரக்காணம் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். இதைத்தொடர்ந்து டிஎஸ்பி அருண்குமார், இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர் சிவகொழுந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த போலீசார், கொலைக்கு காரணமான சீனிவாசன் மற்றும் அவரது உறவினர்களைத் தீவிரமாக தேடிவருகின்றனர். சகோதரர்களுக்குள் ஏற்பட்ட சொத்து தகராறில் தம்பியை அண்ணனே அடித்துக் கொலைசெய்த சம்பவம் மரக்காணம் பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.