பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்தபடியே இருந்தது. இதனால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் வெகுவாக அதிகரித்தது. பெட்ரோல், டீசலின் தொடர் விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துவந்தனர். மேலும், விலையைக் குறைக்கக் கோரி எதிர்க்கட்சியினர் தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில், நேற்று (04.11.2021) பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெட்ரோல் விலை 5 ரூபாயும், டீசல் விலை 11 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது. இது தீபாவளி பரிசு என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாஜக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், நேற்று தனது கோயம்பேடு இல்லத்தில் குடும்பத்தினருடன் தீபாவளியைக் கொண்டாடினார். அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “செஸ் விலை பெட்ரோலுக்கு 5 ரூபாயும், டீசலுக்கு 10 ரூபாயும் குறைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு மிகப்பெரிய தீபாவளி பரிசை வழங்கியிருக்கிறார் (மோடி). தமிழ்நாடு அரசு சொன்னதை செய்ய வேண்டும். ஏற்கனவே அவர்கள் தேர்தல் வாக்குறுதியில், “நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும்” என்று பொதுமக்களுக்கு வாக்குறுதி தந்தார்கள். என்ன வாக்குறுதி தந்தார்களோ அதனை நிறைவேற்ற முன்வர வேண்டும். தமிழ்நாடு அரசு முன்வந்து மதிப்புக்கூட்டு வரியை குறைக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின்போது, திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் ‘திமுக ஆட்சிக்கு வந்தால், பெட்ரோல் விலை 5 ரூபாயும், டீசல் விலை 4 ரூபாயும் குறைக்கப்படும்’ எனத் தெரிவித்திருந்தது. அதன்பின் தேர்தலில் வெற்றிபெற்று, முதலமைச்சரானார் மு.க. ஸ்டாலின். அதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரில், பெட்ரோல் மீதான வரியை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்து தமிழ்நாடு அரசு அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.