சீனாவில் ஏராளமான பேரை பலி கொண்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பரவத் தொடங்கியுள்ளது. ஐரோப்பிய நாடான இத்தாலியில் ஒரே நாளில் 250 க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.இந்த கொரோனா வைரஸால் மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
அதுபோல் ஈரான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் வேகமாக பரவி வருவதை தடுக்க அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அதுபோல் இந்தியாவிலும் 80-க்கும் மேற்பட்டோர் வைரஸால் பாதிக்கப்பட்டதால் தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் மூலம் கொரோனா வைரஸ் பரவுகிறது. கேரளாவில் 19 பேர் பாதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர். தேனி மாவட்டத்தில் கேரள எல்லையை ஒட்டி உள்ளதால் கம்பம்மெட்டு, போடிமெட்டு, குமுளி ஆகிய பகுதிகளில் மருத்துவத் துறையினர், சுகாதாரத்துறையினர் முகாமிட்டு பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வாகனங்களில் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியை சேர்ந்த ஈஸ்வரி (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) கடந்த சில தினங்களுக்கு முன்பு சமையல் வேலைக்காக கேரளா சென்று வந்தார். இந்த நிலையில் தற்போது அவருக்கு காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா? என பரிசோதனை செய்ய தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அந்த பெண்ணை அனுப்பி வைத்தனர்.
அங்கு ரத்த மாதிரி எடுத்து புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன் முடிவு தெரிந்த பின்னர்தான் அந்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதா என்று உறுதி செய்யப்படும் என டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும் அவரை தனி வார்டில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது சம்பந்தமாக கம்பம் மருத்துவ அதிகாரி பொன்னரசன் கூறுகையில், அந்தப் பெண்ணுக்கு காய்ச்சல், இருமல், தொற்றுநோய்கள் இருக்கிறது. அதனால் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. எனவேதான் மேல் சிகிச்சைக்காக தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அதைத்தொடர்ந்து கம்பம், கூடலூர், உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மருந்து தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் காய்ச்சல் இருமல் அறிகுறி தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டும். மேலும் கொரோனா வைரஸ் குறித்து பீதி அடைய வேண்டாம் என்று கூறினார். இச்சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.